பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், செல்வாக்கைப் பயன்படுத்தி தப்ப முடியாது - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 03 AUG 2024 5:35PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தல் கும்பல் போன்றவர்களுக்கு எதிரான இயக்கத்தை யூனியன் பிரதேச நிர்வாகமும்  காவல்துறையும் இணைந்து தொடங்கியுள்ளன என்று மத்தியப் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (03-08-2024) தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் ஹிராநகரில் உள்ள அரசு கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு இளைஞர்களை மேம்படுத்துதல் என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார். சவால்களை சமாளிக்க உள்ளூர் நிர்வாகமும் காவல்துறையும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். கடத்தல்காரர்கள், சட்டவிரோத சுரங்க நடவடிக்கையில் ஈடுபடுவோர், பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் ஆகியோரை எதிர்கொள்வதில் அவர்களின் செல்வாக்கு அல்லது அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் எவரும் தப்ப முடியாது என்று அவர் எச்சரித்தார்.

மற்றவர்களின் குழந்தைகளை போதைப்பொருள் பழக்கத்துக்குத் தள்ளுபவர்கள், தங்கள் சொந்த குழந்தைகளும் இதே பழக்கத்துக்கு ஆளாவார்கள் என்பதை உணர வேண்டும் என்று அவர் கூறினார். ஏனெனில் அவர்கள் ஒரே சமூகத்தில் வாழ்வதால் அவர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் மோசமான விளைவுகளை எடுத்துக் கூற சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்யுமாறு கல்லூரி நிர்வாகத்தை மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான அறப்போரில் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்குமாறும், அதிக வெளிப்படைத்தன்மை, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதிகளுக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும் இடையிலான தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் அழைப்பு விடுத்தார். ஜம்மு காஷ்மீர் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாத சம்பவங்களை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார். 

பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின்  10 ஆண்டு ஆட்சியில் கத்துவா மாவட்டம் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். பின்னர், அமைச்சர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பொது மக்களுடன் கலந்துரையாடல், குறை கேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.   மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அவர் ஏராளமான குறைகளை அதே இடத்திலேயே நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். மக்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் உத்தரவிட்டார்.

***

PLM/DL


(Release ID: 2041159) Visitor Counter : 71