சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் உரையாற்றினார்


ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாகவே, உடல் உறுப்பு தானத்திலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்: திருமதி அனுப்பிரியா படேல்

Posted On: 03 AUG 2024 5:25PM by PIB Chennai

நாட்டில் உறுப்பு தானத்தின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய இறந்த நபர்களின் உறுப்புகளை தானம் பெற வேண்டிய அவசியம் உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் கூறியுள்ளார்.

புதுதில்லியில், 14வது இந்திய உறுப்பு தான தின நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், ஒருவரது உறுப்பு தானம் 8 பேருக்கு புத்துயிர் அளிக்கும் என்றார். எண்ணற்ற மக்களின் உயிரைக் காப்பாற்றுவதன் மூலம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய சேவையாற்றிய இறந்த உடல் உறுப்பு நன்கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களை அவர் பாராட்டினார். அவர்கள் முழு நாட்டிற்கும் உத்வேகம் அளிக்கிறார்கள் என்று கூறிய அவர், மரணத்திற்குப் பிறகு தங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதியளிக்க முன்வருமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு தனிநபரும்நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலமாக மட்டுமே, உறுப்பு தானம் - மாற்று அறுவை சிகிச்சையில் முன்னணி நாடுகளில் ஒன்றாக  இந்தியா மாற முடியும் என்று அவர் கூறினார்.

ஸ்பெயின், அமெரிக்கா, சீனா போன்ற பல நாடுகள் உடல் உறுப்பு தானத்தில் முன்னணியில் இருந்தாலும், சமீப காலங்களில் இந்தியா இந்தத் துறையில் சில குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் கூறினார். மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு பெறப்பட்ட உறுப்புகள் எதுவும் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நித்தி ஆயோக்கின் டாக்டர் வினோத் குமார் பால், உறுப்புகளின் தேவை - கிடைத்தலுக்கு இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை எடுத்துரைத்தார். உறுப்பு மாற்று சவாலை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் சீர்திருத்தங்களின் அவசியத்தை அவர் குறிப்பிட்டார்.

மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் திரு அபூர்வ சந்திரா, உடல் உறுப்புகள் தேவைக்காக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பதிவு செய்வதாகவும் உறுப்பு தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் எடுத்துரைத்தார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும், பெரும்பாலான உறுப்பு தானங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே நடப்பதால், உறுப்பு தானத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியின்போது, இறந்த உறுப்பு தான நன்கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களை மத்திய இணையமைச்சர் பாராட்டினார். உடல் உறுப்பு தானம், மாற்று அறுவை சிகிச்சை துறையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், மண்டலமாநில உறுப்பு - திசு மாற்று அமைப்புகள், மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள், தொழில்முறை சங்கங்கள், மருத்துவ வல்லுநர்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றிற்கான விருதுகளும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

சிறந்த சோட்டோ (SOTTO -State Organ and Tissue Transplant Organisation) மாநிலத்திற்கான விருதை தெலுங்கானாவும், இரண்டாவது சிறந்த சோட்டோ/மாநிலத்திற்கான விருதை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவும் பெற்றன.

பின்னணி:

உறுப்பு - திசு தானத்தை ஊக்குவிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.  பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் "மனதின் குரல்" நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை பலமுறை எடுத்துரைத்துள்ளார்.

இந்திய உறுப்பு தான தினம் (IODD) 2010 முதல் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இது மூளைத் தண்டு இறப்பு - உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், உறுப்பு தானம் தொடர்பான கட்டுக்கதைகள்யும் தவறான கருத்துக்களையும் அகற்றவும், மரணத்திற்குப் பிறகு உறுப்புகள், திசுக்களை தானம் செய்யவும் மக்களை ஊக்குவித்து ஊக்குவிக்கிறது.

தானம் செய்யப்படும் ஒவ்வொரு உறுப்பும் விலைமதிப்பற்றது. உயிர்  ஒருவர் இறந்த பிறகு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம், கணையம், குடல் போன்ற முக்கிய உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் 8 பேருக்கு புதிய வாழ்க்கையை வழங்க முடியும். மேலும் கார்னியா, தோல், எலும்பு, இதய வால்வு போன்ற திசுக்களை தானம் செய்வதன் மூலம் பலரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். ஒரு உன்னதமான காரணத்திற்காக உறுதிமொழி எடுக்கவும், இந்த தேசிய முயற்சியில் பங்களிக்கவும் மக்கள் முன்வர ஊக்குவிக்கப்படுகிறார்கள். உறுப்பு தானம், மாற்று அறுவை சிகிச்சை பற்றிய எந்தவொரு தகவலுக்கும் www.notto.mohfw.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 180114770-ஐ அழைக்கலாம்.

உறுப்பு - திசு தானம் செய்ய, மக்கள் உறுதிமொழி எடுக்க வசதியாக, https://notto.abdm.gov.in என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் இதுவரை 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முன்வந்து 2023 செப்டம்பர் 17 முதல் தங்கள் உறுதிமொழியை பதிவு செய்துள்ளனர்.

 

***

PLM/DL



(Release ID: 2041157) Visitor Counter : 62