சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மே 2024 வரை, நாடு முழுவதும் உள்ள 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 410 பிரத்யேக போக்ஸோ (இ-போக்ஸோ) நீதிமன்றங்கள் உட்பட 755 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன, அவை 2,53,000 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ளன
Posted On:
02 AUG 2024 2:43PM by PIB Chennai
குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம், 2018-ன் கீழ், பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து வைப்பதற்காக, பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உட்பட விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தை மத்திய அரசு 2019 அக்டோபர் முதல் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டம் முதலில் ஓராண்டுக்கு செயல்படுத்தப்பட்டு, மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டது. இத்திட்டம் தற்போது 31.03.2026 வரை ரூ.1952.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் நிர்பயா நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக ரூ.1207.24 கோடி செலவிடப்படும். மத்திய அரசு சேவை திட்ட முறையில் (6040, 9010) ஒரு நீதித்துறை அலுவலர், 7 உதவிப் பணியாளர்கள் மற்றும் அன்றாடச் செலவுகளுக்காக நெகிழ்வு மானியம் ஆகியவற்றிற்காக நிதி விடுவிக்கப்படுகிறது.
உயர் நீதிமன்றங்களில் இருந்து மே 2024 வரை பெறப்பட்ட தகவல்களின்படி, நாடு முழுவதும் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 410 பிரத்யேக போக்ஸோ (இ-போக்சோ) நீதிமன்றங்கள் உட்பட 755 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன, அவை 2,53,000 க்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்துள்ளன. மாநில வாரியாக செயல்படும் விரைவு சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை மற்றும் 31.05.2024 அன்று முடிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கைகுறித்த விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
விரைவு சிறப்பு நீதிமன்றங்களை நிறுவியிருப்பது, பெண்கள் பாதுகாப்பு, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்த்துப் போராடுதல், பாலியல் பலாத்காரம் மற்றும் போக்ஸோ சட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தைக் குறைத்தல் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கு நீதிக்கான மேம்பட்ட அணுகலை வழங்குதல் ஆகியவற்றில் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. முக்கியமான பாலியல் குற்ற வழக்குகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற தொழில்முறை மற்றும் அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் மற்றும் உதவி ஊழியர்களுடன், இந்த நீதிமன்றங்கள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிர்ச்சி மற்றும் துயரத்தைத் தணிப்பதில் விரைவான தீர்வை வழங்குவதையும், அவர்கள் முன்னேறிச் செல்வதையும் உறுதி செய்கின்றன. விரைவு சிறப்பு நீதிமன்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் எளிதில் பாதிப்புக்குள்ளாகும் சாட்சி வாக்குமூல மையங்களை நீதிமன்றங்களுக்குள் அமைப்பது மற்றும் கருணை அடிப்படையிலான சட்ட அமைப்பிற்கு முக்கிய உறுதுணையாக அமையும் வகையில் நீதிமன்றங்களை குழந்தை நேய நீதிமன்றங்களாக மாற்றுவது போன்ற அணுகுமுறையை பின்பற்றி வருகின்றன.
புதுச்சேரி இந்த திட்டத்தில் சேர பிரத்யேகமாக கேட்டுக்கொண்டது, பின்னர் மே 2023 இல் ஒரு பிரத்யேக போக்சோ நீதிமன்றத்தை செயல்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 14 போக்சோ நீதிமன்றங்களில் 7,225 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த தகவலை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் (சுயாதீன பொறுப்பு) வழங்கினார்; மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெஹ்வால் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
*****
PKV/KPG/KV
(Release ID: 2040851)
Visitor Counter : 59