சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்து வைப்பதற்காக மக்கள் நீதிமன்றங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 02 AUG 2024 2:45PM by PIB Chennai

கடந்த மூன்று ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 17,44,19,663 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 11,55,688 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாநில மக்கள் நீதிமன்றங்கள் வாயிலாக தமிழ்நாட்டில் 3563 சிறப்பு அமர்வுகள் நடத்தப்பட்டு, 66,935 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் (பொது பயன்பாட்டு சேவைகள்)  மூலம்  தமிழ்நாட்டில் 3179 அமர்வுகள் நடத்தப்பட்டு, 1316 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், வழக்குகளை, வழக்கு விசாரணைக்கு வரும் முன் தீர்த்து வைக்கவும், சட்டப்பணிகள் நிறுவனங்கள் பொருத்தமெனக் கருதும் கால இடைவெளிகளில் மக்கள் நீதிமன்றங்களை நடத்துகின்றன. மக்கள் நீதிமன்றங்கள் ஒரு நிரந்தர பணியமைப்பு அல்ல, அவை அந்தந்த நீதிமன்றங்களால் குறிப்பிடப்படும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுகின்றன. மக்கள் நீதிமன்றங்கள் நிரந்தரமானவை அல்ல என்பதால், தீர்வு காணப்படாத அனைத்து வழக்குகளும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன. எனவே அவை மக்கள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதில்லை. எந்த வகையான மக்கள் நீதிமன்றமும் அமைக்கப்படுவதற்கு முன்பாக, குறிப்பிட்ட தீர்வு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில சட்டப்பணிகள் ஆணையங்கள் மூலம், சட்ட உதவித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் (2024 ஜூலை வரை) தேசிய சட்டப் பணிகள் ஆணையத்திற்கு (NALSA) மத்திய அரசு 1636 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், மேலும் அதிக அளவில் மக்கள் நீதிமன்றங்களை நடத்த தேசிய சட்டப்பணிகள் ஆணையம் (நால்சா) வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேலும், கோவிட்டைக் கருத்தில் கொண்டு, மின்னணு மக்கள் நீதிமன்றங்கள் (இ-லோக் அதாலத்)  நடத்தப்பட்டது, இது மக்கள் நீதிமன்றங்களில் பங்கேற்க முடியாத மக்களுக்கு நீதிக்கான அணுகலை கணிசமாக மேம்படுத்தியது. முதல் இ-லோக் அதாலத் 27.06.2020 அன்று நடைபெற்றது, அதன் பின்னர் 28 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இ-லோக் அதாலத் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் 902.96 லட்சம் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 96.90 லட்சம் வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், தேசிய சட்டப்பணிகள் ஆணையம், தேசிய மக்கள் நீதிமன்றங்களை ஏற்பாடு செய்வதற்கான நாட்காட்டியை வெளியிடுகிறது. 2024-ம் ஆண்டில், தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மார்ச் 9 மற்றும் மே11 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன, மேலும் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் 2024 செப்டம்பர் 14 மற்றும்  டிசம்பர் 14 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில மக்கள் நீதிமன்றங்கள், உள்ளூர் நிபந்தனைகள் மற்றும் தேவைகளின்படி மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களால் நடத்தப்படுகின்றன.

இந்த தகவலை சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெஹ்வால் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

MM/AG/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2040839) வருகையாளர் எண்ணிக்கை : 249
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP , Manipuri , Punjabi