பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வயநாட்டில் பேரிடர் நிவாரண பணிகளில் இந்திய கடலோர காவல்படை முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது

Posted On: 01 AUG 2024 6:26PM by PIB Chennai

இந்தியக் கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) மாவட்ட தலைமையகம் (கேரளா & மாஹே) பேப்பூர் கடற்படை தளம் ஆகியவை கேரளாவின் வயநாட்டில் பேரிடர் மீட்புப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. துணை கமாண்டன்ட் விவேக் குமார் தீட்சித் தலைமையிலான 35 வீரர்கள் கொண்ட குழு 2024, ஜூலை 30 முதல் சூரல்மாலா மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் குழு பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த ஏராளமான பொதுமக்களுக்கு உதவியுள்ளது. அவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கும், நிவாரண முகாம்களுக்கும் இடம்பெற செய்துள்ளது. உயிர் பிழைத்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டறிய இடிபாடுகளை அகற்றுவதிலும், காயமடைந்தவர்களுக்கு உடனடி முதலுதவி அளிப்பதிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மாநில நிர்வாகம், இந்திய ராணுவம், இந்திய கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், உள்ளூர் காவல்துறை மற்றும் பல்வேறு தன்னார்வ குழுக்கள் இடம் பெற்றுள்ளனர்.

களப்பணிகளை வலுப்படுத்தும் வகையில், கோழிக்கோட்டில் உள்ள கடலோர காவல்படை விமான தளத்திலிருந்து ஒரு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் மீட்பு நடவடிக்கைகளில் மேம்பட்ட  ஆதரவுக்காகவும், நிவாரணப் பொருட்களை வான்வழி வீசுவதற்காகவும் தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக, இந்திய கடலோர காவல்படையின் அபினவ் கப்பல் கொச்சியிலிருந்து பேப்பூருக்கு உயிர் காக்கும் உபகரணங்கள், நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் தண்ணீரை ஏற்றிக்கொண்டு வயநாட்டில் உள்ள பல்வேறு பேரிடர் நிவாரண முகாம்களுக்கு விநியோகிக்க சென்றுகொண்டிருக்கிறது.

***

IR/RS/DL


(Release ID: 2040454) Visitor Counter : 43