உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விரைவு குடியேற்றம்-நம்பகமான பயணிகள் திட்டம்

Posted On: 30 JUL 2024 4:31PM by PIB Chennai

புதுதில்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள டி-3 முனையத்தில்  விரைவு குடியேற்றம் – நம்பகமான பயணிகள் திட்டத்தை அரசு 22.06.2024 அன்று தொடங்கியுள்ளது. இத்திட்டம்  வேகமான, மென்மையான மற்றும் பாதுகாப்பான குடியேற்ற அனுமதியுடன் சர்வதேச இயக்கத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக, இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் அட்டைதாரர்களுக்கு இலவசமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

விரைவு குடியேற்றம் – நம்பகமான பயணிகள் திட்டம், https://ftittp.mha.gov.in என்ற இணையவழி  தளம்  மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தில் சேர, விண்ணப்பதாரர் தமது விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் உயிரி அடையாளங்கள் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் அல்லது விமான நிலையம் வழியாக செல்லும் நேரத்தில் பெற்றுக்கொள்ளப்படும். பதிவு செய்யப்பட்ட பயணிகள் இ-வாயில்களில் விமான நிறுவனங்களால் வழங்கப்பட்ட போர்டிங் பாஸை ஸ்கேன் செய்ய வேண்டும், பின்னர் அவரது பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். பயணிகளின்  உயிரி அடையாளங்கள் இ-வாயில்களில் அங்கீகரிக்கப்படும். அத்தகைய அங்கீகாரத்தில், இ-வாயில்  தானியங்கியாக திறக்கப்படுவதன் மூலம்  அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குடியேற்ற அலுவலகம், இந்த திட்டத்தை செயல்படுத்தும் முதன்மை முகமையாக செயல்படும்.

முதற்கட்டமாக, தில்லி விமான நிலையம் தவிர, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், அகமதாபாத் ஆகிய முக்கிய விமான நிலையங்கள் இத்திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2039063)

BR/KR


(Release ID: 2039471) Visitor Counter : 54