தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம்

Posted On: 29 JUL 2024 7:02PM by PIB Chennai

வேலைவாய்ப்புகள், வேலையின்மை ஆகியவை குறித்த அதிகாரப்பூர்வ தரவு ஆதாரம் அவ்வப்போது தொழிலாளர்  கணக்கெடுப்பு மூலம் வெளியிடப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு, 2017-18ம் ஆண்டு முதல் புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஜூன் வரை ஆய்வு செய்யப்பட்டு கணக்கெடுப்பு வெளியிடப்படுகிறது.  அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைகயிபடி, நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான வழக்கமான நிலையில் மதிப்பிடப்பட்ட தொழிலாளர் விகிதம் (WPR), வேலையின்மை விகிதம் (UR) பின்வருமாறு:

* 2017-18ம் ஆண்டில்  தொழிலாளர் விகிதம் 46.8 சதவீதமாகவும் வேலையின்மை 6.0 சதவீதமாகவும் இருந்தது.

*2022-23ம் ஆண்டில்  தொழிலாளர் விகிதம் 56.0 சதவீதமாகவும் வேலையின்மை 3.2 சதவீதமாகவும் இருந்தது.

மேற்கண்ட புள்ளி விவரங்கள், வேலைவாய்ப்பு பங்கேற்பு விகிதம் அதாவது வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்து வரும் போக்கையும், வேலைவாய்ப்பற்றோர் விகிதம் குறைந்து வரும் போக்கையும் காட்டுகிறது.

மேலும், நாட்டில் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான வழக்கமான நிலையில் மதிப்பிடப்பட்ட வேலையின்மை விகிதம் (UR) பின்வருமாறு:

*2017-18ம் ஆண்டில் இந்த வயதுப் பிரிவில் வேலையின்மை விகிதம் 17.8 சதவீதம் இருந்தது.

* 2022-23ம் ஆண்டில் இந்த வயதுப் பிரிவில் வேலையின்மை விகிதம் 10.0 சதவீதமாக குறைந்தது.

நாட்டில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் குறைந்து வருகிறது என்பதை தரவு சுட்டிக்காட்டுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கேஎல்இஎம்எஸ்  (KLEMS - K: Capital, L: Labour, E: Energy, M: Materials and S: Services) தரவுகளின்படி, 2014-15-ம் ஆண்டில் 47.15 கோடியாக இருந்த வேலைவாய்ப்பு 2023-24-ம் ஆண்டில் 64.33 கோடியாக அதிகரித்துள்ளது. 2014-15 முதல் 2023-24 வரை மொத்த வேலைவாய்ப்பு அதிகரிப்பு சுமார் 17.19 கோடியாகும். கேஎல்இஎம்எஸ் தரவு https://www.rbi.org.in/Scripts/KLEMS.aspx என்ற இணையதளத்தில் உள்ளது.

மேலும், 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 4.1 கோடி இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்தில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, இதர வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில் ரூ.2 லட்சம் கோடி மத்திய ஒதுக்கீட்டில் பிரதமரின் 5 திட்டங்களையும் முன்முயற்சிகளையும் அரசு அறிவித்தது.

வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமையாகும். அதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம், வீட்டுவசதி - நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நிதி அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் போன்ற மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் (PMEGP), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் (MGNREGS), பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY), கிராமப்புற சுயவேலைவாய்ப்பு - பயிற்சி நிறுவனங்கள் (RSETIs), தீன் தயாள் அந்தோதயா யோஜனா-தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NULM), பிரதரின் முத்ரா திட்டம் (PMMY) போன்றவற்றை செயல்படுத்துகின்றன. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களின் விவரங்களை https://dge.gov.in/dge/schemes_programmes

 என்ற இணையதளத்தில் காணலாம்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் - வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

(Release ID: 2038699)

***



(Release ID: 2038917) Visitor Counter : 39


Read this release in: English , Hindi , Hindi_MP , Punjabi