வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

அம்ருத் திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஈடுபாடு

Posted On: 29 JUL 2024 1:07PM by PIB Chennai

நகர்ப்புற மறுமலர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான அடல் இயக்கம் (அம்ருத்) 2015 ஜூன் 25 அன்று நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 நகரங்களில் தொடங்கப்பட்டது.

 

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் அனைத்து தலைநகரங்கள், பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து பாரம்பரிய நகரங்கள், முக்கிய நதிகளின் கிளைகளில் உள்ள நகரங்கள், மலை மாநிலங்கள், தீவுகள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவற்றிலிருந்து 10 நகரங்கள் (ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒன்றுக்கு மிகாமல்) அம்ருத் திட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

 

நீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் கசடு மேலாண்மை, மழை நீர் வடிகால், நகர்ப்புற போக்குவரத்து, பசுமை இடங்கள் / பூங்காக்களின் வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் சீர்திருத்த செயலாக்கம் ஆகியவற்றை அம்ருத் திட்டத்தின் கூறுகள் உள்ளடக்கி உள்ளது.

 

அம்ருத் திட்டத்தின் கீழ், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும், மதிப்பிடவும், முன்மொழியவும், செயல்படுத்தவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளன. மாநில வருடாந்திர செயல் திட்டத்திற்கு அடிப்படை ஆதாரமாக உள்ள சேவை நிலை மேம்பாட்டுத் திட்டங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் தயாரிக்கப்படுகின்றன.

 

நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித் துறை செயலாளரின் தலைமையில் மாநில அளவிலான தொழில்நுட்பக் குழு, மாநிலத்தின் தலைமைச் செயலாளர் தலைமையிலான மாநில உயர்மட்ட வழிகாட்டுக் குழுவிற்கு, மாநில அளவில் ஒப்புதல் வழங்க தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது.

 

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் உயர்மட்டக் குழு, மாநில அரசு சமர்ப்பித்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கிறது. பின்னர் இத்திட்டங்கள் மாநில அளவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

 

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு. டோகான் சாஹு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2038330)
PKV/RR/KR



(Release ID: 2038360) Visitor Counter : 38