விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பு
Posted On:
26 JUL 2024 6:33PM by PIB Chennai
புதிதாக 10,000 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளை ஏற்படுத்தி ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஜூலை 22, 2024ன்படி, இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் 14 அமைப்புகளுக்கு 10,000 வேளாண் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், நாடு முழுவதும் 8,780 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில், தமிழ்நாட்டில் 413 அமைப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்யும் வகையில், செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களின்படி, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மேலும் பலமானதாகவும் இருக்கச் செய்யும் வகையில், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகள், பெண் சுயஉதவிக் குழுக்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகள், பிற பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் ஆகியோரை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் வாரியம் மற்றும் ஆட்சிமன்றக் குழுவில் பெண்களின் பங்கேற்பை போதுமான அளவில் இருக்கச் செய்யவும், குறைந்தபட்சம் ஒரு பெண் உறுப்பினரை இருக்கச் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
22.07.2024 வரை, முற்றிலும் பெண்களைக் கொண்ட 810 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளில் ஒட்டுமொத்தமாக பதிவுசெய்துகொண்டுள்ள 19,82,835 விவசாயிகளில் 6,86,665 பேர் பெண்களாக உள்ளனர்.
ஒரு மாவட்டம், ஒரு பொருள் திட்டத்தின்கீழ், 379 வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தகவல்களை மாநிலங்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
******
(Release ID: 2038135)
Visitor Counter : 64