சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

இலவச சட்ட உதவி மூலம் பயனடைந்தோர் விவரம்

Posted On: 26 JUL 2024 1:25PM by PIB Chennai

எஸ்சி/எஸ்டி வகுப்பினர் உட்பட, சமுதாயத்தில்  நலிந்த பிரிவினர், ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதற்காக, கீழ்காணும் அமைப்புகள்/ நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன:-

  1. தேசிய சட்டப்பணிகள் ஆணையம் (NALSA), தேசிய அளவிலானது
  2. உச்சநீதிமன்ற சட்டப்பணிகள் குழு (SCLSC), உச்சநீதிமன்ற அளவிலானது
  3. 38 உயர்நீதிமன்ற சட்டப்பணிகள் குழு (HCLSCs), உயர்நீதிமன்ற அளவிலானது
  4. 37 மாநில சட்டப்பணிகள்  ஆணையம் (SLASs), மாநில அளவிலானது
  5. 703 மாவட்ட சட்டப்பணிகள்  ஆணையம்  (DLSAs), மாவட்ட அளவிலானது
  6. 2390 தாலுகா சட்டப்பணிகள் குழுக்கள் (TLSCs), தாலுகா அளவிலானது ஆகும்.

மக்கள்  தங்களது உரிமைகள் பற்றி அறிந்துகொள்ள ஏதுவாக, குழந்தைகள், தொழிலாளர்கள், விபத்துகளால் பாதிக்கப்பட்டோர், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த பல்வேறு சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து, சட்டப்பணிகள் ஆணையத்தால் நாடு முழுவதும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது தவிர, சட்டப்பணிகள் ஆணையம், பல்வேறு சட்டங்களை, எளிய மொழியில் சிறு புத்தகங்கள், துண்டு பிரசுரங்களாக அச்சடித்து  பொதுமக்களுக்கு விநியோகிக்கிறது. 2023-24-ம் ஆண்டில் 4.30 லட்சத்திற்கும் மேற்பட்ட சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 4.49 கோடி பேர் பங்கேற்றனர்.

2021-22 முதல் 2024-25 வரை சட்டப்பணிகள் நிறுவனங்களால் வழங்கப்பட்ட இலவச சட்ட உதவி சேவைகள் மூலம், மாநிலம்/ யூனியன் பிரதேச வாரியாக  பலனடைந்தோர் எண்ணிக்கை மற்றும் நிதியுதவி விவரம் வருமாறு:

மாநில அளவிலான 37 இலவச சட்ட உதவி ஆணையம் மூலம்  நாடு முழுவதும் 93,59,601 பேர் பயனடைந்த நிலையில்,  தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆண்டுகளில் 1,40,127 பேர் பயனடைந்துள்ளனர்.

இதேபோன்று, சட்டப்பணிகள் ஆணையம் மூலம் சட்ட உதவி முகாம்கள் நடத்துவதற்காக ரூ.806,49,35,730 நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ரூ. 36 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சட்டத்துறை  அமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெஹ்வால் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த ஒரு பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037349

***

MM/RS/KR



(Release ID: 2037449) Visitor Counter : 17