சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கான கருணைத் தொகை ரூ.10 லட்சமாக அதிகரிப்பு

Posted On: 25 JUL 2024 1:36PM by PIB Chennai

மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறைக்கவும், பழிவாங்கும் நோக்கத்தோடு யானைகள் கொல்லப்படுவதை தவிர்க்கவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. காட்டு யானைகளால் ஏற்படும் சொத்து சேதம், உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில், 2023, டிசம்பர் 22 தேதியிட்ட ஆணையின்படி, வனவிலங்குகளால் உயிரிழப்போரின் குடும்பத்திற்கான கருணைத் தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையேயான மோதலை குறைப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை, மனிதர்களும், வனவிலங்குகளும் இணக்கத்துடன்  வாழ்வதற்கான அணுகுமுறையை  அதில் குறிப்பிட்டுள்ளது.

யானைகளை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரயில் விபத்தில் யானைகள் இறப்பை தவிர்க்க, ரயில்வே அமைச்சகம், சுற்றுச்சூழல், வனத்துறை இடையே நிரந்தரமான ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் உட்பட யானைகள் அதிகம் உள்ள 15 மாநிலங்களில் 150 யானை வழித்தடங்களை மாநில வனத்துறைகளின் ஒத்துழைப்புடன் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைத்துள்ளது. இவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

2019-20 நிதியாண்டில் ரூ.30 கோடியாக இருந்த யானைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2022-23 நிதியாண்டில் 35 கோடியாக அதிகரித்தது. மத்திய அரசு ஆதரவுடனான யானைகள் பாதுகாப்புத் திட்டம் 2023-24-ம் நிதியாண்டில் புலிகள், யானைகள் பாதுகாப்பு என்பதாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்,  ரூ.336.80 கோடி ஒதுக்கப்பட்டது.

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர்   திரு கீர்த்தி வர்தன் சிங் மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036733

*** 

SMB/RS/KR



(Release ID: 2036977) Visitor Counter : 21


Read this release in: English , Urdu , Hindi