உள்துறை அமைச்சகம்
போலி தளங்கள் மூலம் இணையவழி குற்றங்கள்
Posted On:
24 JUL 2024 5:04PM by PIB Chennai
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் குற்றங்கள் குறித்த புள்ளிவிவர தரவுகளைத் தொகுத்து "இந்தியாவில் குற்றம்" என்ற தனது வெளியீட்டில் இடம்பெறச் செய்கிறது. அதன் தரவுகளின்படி, 2020-ம் ஆண்டு 10395 வழக்குகளும், 2021 –ம் ஆண்டு 14007 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 17470 வழக்குகளும் இணைய வழி குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழி குற்றங்களை விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் கையாள்வதற்கான நடைமுறையை வலுப்படுத்த, கணினி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புதல், எச்சரிக்கைகள், ஆலோசனைகளை வழங்குதல், சட்ட அமலாக்க பணியாளர்கள், வழக்குரைஞர்கள், நீதித்துறை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாடு , பயிற்சி, இணைய தடய அறிவியல் வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான இணையவழி குற்றங்களையும் ஒருங்கிணைந்து கையாள்வதற்காக 'இந்திய இணையவழி குற்ற தடுப்பு மையத்தை' அரசு அமைத்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து வகையான இணையவழி குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக, 'தேசிய இணையவழி குற்ற தகவல் இணையதளம் (https://cybercrime.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் புகாரளிக்கப்பட்ட இணையவழி குற்ற சம்பவங்கள், அவற்றை முதல் தகவல் அறிக்கைகளாக மாற்றுதல், அதன் அடுத்தடுத்த நடவடிக்கைகள் சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச சட்ட அமலாக்க முகமைகளால் கையாளப்படுகின்றன.
சந்தேகத்திற்கிடமான இணையதள யுஆர்எல்களைப் பயன்படுத்தி, இணையவழி குற்றத்தில் ஈடுபட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து விரைவாகப் புகாரளிக்க, தேசிய இணைய வழி குற்ற தகவல் இணைய தளத்தில் 31.01.2024 முதல் "சந்தேகத்திற்குரிய தகவல்" அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 5252 சந்தேகத்திற்குரிய யுஆர்எல்-கள் பதிவாகியுள்ளன.
இணையவழி குற்ற சம்பவங்கள் குறித்து புகார் செய்ய கட்டணமில்லா உதவி எண் '1930' செயல்படுத்தப்படுகிறது.
இத்தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. பந்தி சஞ்சய் குமார் தெரிவித்தார்.
***
(Release ID: 2036395)
IR/AG/KR
(Release ID: 2036799)
Visitor Counter : 77