பாதுகாப்பு அமைச்சகம்

கார்கில் வெற்றி தினத்தின் வெள்ளி விழாவையொட்டி பிஷியானா விமானப்படை தளத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது

Posted On: 20 JUL 2024 5:34PM by PIB Chennai

கார்கில் வெற்றி தினத்தின் வெள்ளி விழாவையொட்டி பிஷியானா விமானப்படை தளத்தில் இந்திய ஆயுதப்படைகளின் வீரத்தையும் தேச சேவையில் செய்த தியாகங்களையும் கௌரவிக்கும் வகையில் கொண்டாட்டம் நடைபெற்றது.  இந்திய விமானப்படையின் ஆபரேஷன் சஃபெத் சாகர், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் விஜய் ஆகியவற்றைத் தொடர்ந்து 1999-ம் ஆண்டில் கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றியின் 25 வது ஆண்டு நிறைவைக் குறிப்பதாக இந்தக் கொண்டாட்டம் அமைந்துள்ளது. ராணுவ விமானப் போக்குவரத்து வரலாற்றில் இது உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இதில் அதிக உயரத்தில் உள்ள இலக்குகளுக்கு எதிராக விமான சக்தி வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பிஷியானா விமானப்படை தளத்தை, தளமாகக் கொண்ட "கோல்டன் அம்புகள்" என்று அழைக்கப்படும் மிக் 21 வகை விமானங்களை இயக்கும் இந்திய விமானப் படையின்  17வது  படைப்பிரிவு, கார்கில் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றது.

எதிரி துருப்புகளை வெளியேற்ற பல உளவு, தாக்குதல் பணிகளை அது மேற்கொண்டது. இதற்காக, இந்த படைப்பிரிவுக்கு சிறப்பான சேவைக்காக மதிப்புமிக்க கௌரவம் வழங்கப்பட்டது. இந்த மதிப்புமிக்க பிரிவு ஆபரேஷன் சஃபேத் சாகரில் பங்கேற்ற விமானப்படை பிரிவுகளில் அதிகபட்ச கௌரவங்களையும் விருதுகளையும் வென்றுள்ளது.

இது தொடர்பான வெற்றி கொண்டாட்ட நிகழ்வு 2024 ஜூலை 20, அன்று பிஷியானாவில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் நடைபெற்றது. மேற்கு விமான கட்டளையின் மூத்த அதிகாரி ஏர் மார்ஷல் பி.கே.வோஹ்ராவால் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ்.தனோவா (ஓய்வு), விமானப் படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆகாஷ் கங்கா ஸ்கை டைவிங் குழுவினரின் பாரா-டிராப், மூன்று ரஃபேல்மூன்று ஜாகுவார் போர் விமானங்களின் 'விக்' வடிவத்தில் ஃப்ளைபாஸ்ட், எம்ஐ -17 1 வி ஹெலிகாப்டர் மூலம் ஸ்லிதரிங், சுகோய் -30 எம்.கே.ஐ போர் விமானங்களின் குறைந்த நிலை ஏரோபாட்டிக்ஸ் ஆகியவை வான்வழி காட்சிகளும் நிகழ்ச்சியில் நடத்தப்பட்டன. 

விமானப்படை வீரர்களின் துணிச்சலான உணர்வு, துல்லியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த வான்வழி காட்சியை பள்ளி குழந்தைகள் உட்பட 5000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

 

***

PLM/DL



(Release ID: 2034665) Visitor Counter : 17


Read this release in: Urdu , English , Marathi , Hindi