விவசாயத்துறை அமைச்சகம்
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் 96-வது நிறுவன தினம் & தொழில்நுட்ப தினக் கொண்டாட்டத்தை மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று தொடங்கிவைத்தார்
Posted On:
16 JUL 2024 5:55PM by PIB Chennai
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் 96-வது நிறுவன தினம் & தொழில்நுட்ப தினக் கொண்டாட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் புதுதில்லியில் இன்று (16.07.2024) தொடங்கிவைத்தார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் மற்றும் மத்திய இணையமைச்சர்கள் திரு பாகீரத் சவுத்ரி, திரு ராம்நாத் தாக்கூர், திரு ஜார்ஜ் குரியன், திரு எஸ் பி சிங் பாகேல், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறைச் செயலாளரும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநருமான திரு ஹிமான்சு பதக் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழாவைக் குறிக்கும் விதமாக மரக்கன்று ஒன்றை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் நட்டு வைத்தார். பிற அமைச்சர்கள் கண்காட்சியை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியின் போது 25 வகையான புதிய பயிர் ரகங்களை மத்திய அமைச்சர்கள் வெளியிட்டனர். மேலும் கால்நடைகள், மற்றும் மீன்வளத்துறைக்கான தடுப்பூசி சாதனங்களையும், பயிர்க்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களையும் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், விவசாயம் இந்திய பொருளாதாரத்தின் ஆன்மாவாகவும், விவசாயிகள் முதுகெலும்பு போன்று திகழ்வதாகவும் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதென்று பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை அடைவதில் வேளாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பிற துறைகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நம்நாட்டில் ஏராளமான சிறு விவசாயிகள் உள்ள நிலையில், அவர்களுக்கான மாதிரிப் பண்ணைகளை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதி பூண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், வேளாண் துறையை பன்முகப்படுத்துவதன் மூலமே, இதனை அடைய முடியும் என்றும் தெரிவித்தார்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பேசுகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள அமைப்புகள், அந்தப் பணிகளை விரைவில் செயல்படுத்துவதன் மூலமே விவசாயிகள் பலன் அடைய முடியும் என்றார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை 35 சதவீதப் பங்களிப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, இத்துறை மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். மீன் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா தற்போது இரண்டாம் இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தற்போது ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033705
***
MM/KPG/DL
(Release ID: 2033734)
Visitor Counter : 79