மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீனவர்களுடனான கோடைகால சந்திப்பு 2024’: மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது
प्रविष्टि तिथि:
12 JUL 2024 4:18PM by PIB Chennai
மத்திய மீன்வளத்துறை சார்பில் இன்று (ஜூலை 12, 2024) மதுரையில் ‘மீனவர்களுடனான கோடைகால சந்திப்பு நிகழ்ச்சி 2024’ நடைபெற்றது. பல்வேறு திட்டங்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் உத்திசார் விவாதங்களை நடத்தவும், மீன்வளத் துறையின் முன்னேற்றம் மற்றும் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் குறித்து விவாதிக்கவும் இந்த நிகழ்ச்சி ஒரு தளமாக அமைந்தது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜவ் ரஞ்சன், இணையமைச்சர்கள் திரு எஸ்.பி.சிங் பாகேல், திரு ஜார்ஜ் குரியன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். பல்வேறு நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை அமைச்சர் டாக்டர்.சஞ்சய் குமார் நிஷாத், பீகார் மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் திருமதி ரேணு தேவி, அசாம் மாநில மீன்வளத்துறை அமைச்சர் திரு கேஷாப் மஹந்தா, மேகாலயாவின் கால்நடை பராமரிப்பு, கால்நடை மருத்துவம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் திரு அலெக்சாண்டர் லாலு ஹெக், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. கேப்ரியல் டி. வாங்சு மற்றும் ஒடிசா அமைச்சர் (பொறுப்பு) திரு கோகுலானந்தா மல்லிக் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்திய மீன்வளத் துறையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களை விளக்கும் காணொலி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. 19 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய ரூ.114 கோடி செலவில் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட 321 பயனுள்ள திட்டங்கள் மெய்நிகர் முறையில் தொடங்கப்பட்டன. துவக்க இடங்களில் இருந்து ஏராளமான மீனவ மக்கள் காணொலி வாயிலாகக் கலந்துரையாடினார்கள். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்,கிசான் கடன் அட்டைகளை விநியோகித்ததுடன், மத்ஸ்ய சம்பதா திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வெளி கட்டமைப்பில் (ஓ.என்.டி.சி ) இணைந்துள்ள மீன் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளுக்கு (எஃப்.எஃப்.பி.ஓ) பாராட்டு தெரிவித்தார்.
சந்தை இணைப்புகளை நிறுவுவதற்கும், மீன்வள வணிகங்களை விரிவுபடுத்துவதற்கும், போட்டி சந்தையை எளிதாக்குவதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அனைத்து எஃப்.எஃப்.பி.ஓக்கள் மற்றும் மீன்வள கூட்டுறவு நிறுவனங்களை தங்கள் வலையமைப்பில் இணைக்க ஓ.என்.டி.சி உடன் இந்திய அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் முன்முயற்சியான இந்திய அரசின் ஆதரவுடன் இயங்கும் ஓ.என்.டி.சி, இயங்குதளத்தை மையமாகக் கொண்ட மாதிரியிலிருந்து திறந்தவெளி வலையமைப்பிற்கு மாற்றுவதன் மூலம் மின்னணு வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் உள்ளடங்கிய திறந்தவெளி டிஜிட்டல் வர்த்தக சூழலியலை உருவாக்குவதற்கான முன்னோடி முயற்சியாகும்.
மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் 2195 எஃப்.எஃப்.பி.ஓக்களை நிறுவ மீன்வளத்துறை ஆதரவளித்துள்ளது. 95 எஃப்.எஃப்.பி.ஓக்கள், ஓ.என்.டி.சி தளத்தில் சேர்ந்துள்ளன. ஓ.என்.டி.சி வலையமைப்பில் சேர்ந்துள்ள உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் கிசான் உற்பத்தி நிறுவனம், சத்தீஸ்கரின் கங்கர் மாவட்டத்தில் உள்ள கப்சி ஃபிஷரி ஃபார்மர் உற்பத்தி நிறுவனம், பிகாரின் பூர்னியாவில் உள்ள பன்மாங்கி மீன் வேளாண் உற்பத்தி நிறுவனம், சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள பஸ்தார் பேர்ல் மீன் வேளாண் உற்பத்தி நிறுவனம், உத்தரப்பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் உள்ள லாரி மீன் உற்பத்தி நிறுவனம் மற்றும் தெலங்கானாவின் சித்திபெட்டில் உள்ள கொண்டபாகா மீன்வள உற்பத்தி நிறுவனம் ஆகிய ஆறு நிறுவனங்களின் சிறப்பான பங்களிப்பிற்காக அவை பாராட்டுதல்களைப் பெற்றன. இந்த ஒத்துழைப்பு, எஃப்.எஃப்.பி.ஓக்களுக்கு குறைக்கப்பட்ட பரிவர்த்தனை செலவுகள், அதிகரித்த சந்தை அணுகல், மேம்பட்ட வெளிப்படைத்தன்மை, அதிகரித்த போட்டி மற்றும் போட்டித்தன்மை, புதுமை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற பல நன்மைகளை வழங்கியுள்ளது.
மதுரையில் நடைபெற்ற விழாவின்போது , நிலையான நீர்வாழ் உயிரின வளர்ப்பு முறைகளைக் கடைபிடித்தல், பணியிடங்களில் புதுமைகளை புகுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வண்ண மீன்வளர்ப்பில் குறிப்பிடத்தக்க பங்காற்றியதற்காக வண்ண மீன்வளர்ப்பு அலகுகளைச் சார்ந்த ஐந்து பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பின்னணி
மீன்வளத் துறையும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகமும் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்திய மீன்வளத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு உத்தி முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மீன்வள ஆதாரங்களின் திறனை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கும், மீன்வளத் துறையின் முழுமையான வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கும், மத்ஸ்ய சம்பதா திட்டம், கிசான் கடன் அட்டை மற்றும் பிரதமரின் மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மீன்வளத்துறை அறிமுகப்படுத்தியது. துறை இடைவெளிகளை நிவர்த்தி செய்யவும், கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டுவரவும் இந்த திட்டங்கள் மூலம் ரூ .38,572 கோடி ஒட்டுமொத்த முதலீடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


***
(Release ID: 2032747)
PLM/BR/RR
(रिलीज़ आईडी: 2032750)
आगंतुक पटल : 93