ஊரக வளர்ச்சி அமைச்சகம்

தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், 10.04 கோடி பெண்களை 90.76 லட்சம் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்துள்ளது

Posted On: 12 JUL 2024 1:45PM by PIB Chennai

கடைக்கோடி மக்களுக்கும் உள்ளடக்கிய வாழ்வாதாரத்தை வழங்கும் அரசின் உறுதிப்பாட்டை ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊரக வாழ்வாதாரத் துறை கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

புதுதில்லியில் நேற்று (11.07.2024) நடைபெற்ற வறுமை ஒழிப்பு குறித்த மாநாட்டில் திரு சரண்ஜித் சிங் பேசினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க அரசு பாடுபட்டு வருகிறது என்று அவர் கூறினார்.   

ஏழைப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை களைய  வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் கூறினார். இத்தகைய சவால்களை அடையாளம் கண்டு தீர்க்கவும் உள்ளூர் நிலைகள் குறித்த புரிதல் இன்றியமையாதது என்று அவர் குறிப்பிட்டார். தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மேற்கொள்ளும் புதுமையான நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். வறுமையை ஒழித்து கடைசி நிலையில் உள்ள மக்களுக்கும் அரசுத் திட்டங்களின் பலன்கள் சென்றடைய அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் கூறினார்.

தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் 10.04 கோடி பெண்களை 90.76 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களாக திரட்டியுள்ளது என்று திரு சரண்ஜித் சிங் தெரிவித்தார். இது நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் கல்வியறிவு, நிலையான வாழ்வாதாரங்கள், சமூக மேம்பாட்டு அம்சங்களை ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார். தீனதயாள் அந்தியோதயா திட்ட  தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய அம்சமாக மகளிருக்கான வாழ்வாதார மேம்பாடு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

***

(Release ID: 2032673)

PLM/AG/RR



(Release ID: 2032720) Visitor Counter : 36