குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மகாராஷ்டிர சட்டமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
11 JUL 2024 6:53PM by PIB Chennai
வணக்கம்,
இன்று உங்கள் அனைவருடனும் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
ஒரு முக்கியமான விஷயத்தில் எனது எண்ணங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள இந்த மதிப்புமிக்க வாய்ப்பை வழங்கிய சட்டப்பேரவைத் தலைவர் திரு ராகுல் நர்வேகருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இந்த அவை தொடங்கப்பட்டதிலிருந்து மக்களுக்கு மிக உயர்ந்த மரியாதையுடன் சேவை செய்யும் உணர்வை நிலைநிறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டமன்ற மேலவை அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் சூழலில் இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்களிடையே உரையாற்றுவதில் நான் பெருமை அடைகிறேன்.
மகாராஷ்டிரா மாநிலம் அதன் வளமான வரலாறு, துடிப்பான கலாச்சாரம் மற்றும் சிறந்த பொருளாதாரம் ஆகியவற்றால் பிற மாநிலங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. மகாராஷ்டிரா இன்று நாட்டை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் ஒரு சக்தி மையமாக உள்ளது.
சிவாஜி மகராஜின் இந்த மகத்தான நிலம் பல நூற்றாண்டுகளாக நமது தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளதுடன் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இது இந்தியாவின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.
மாண்புமிகு உறுப்பினர்களே,
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயகம் என்ற இந்த மதிப்பிற்குரிய அமைப்பின் பாதுகாவலர்கள் என்ற முறையில், பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்கும் புனிதமான கடமையை நீங்கள் ஆற்றுகிறீர்கள். அனைத்து மக்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்து, பொதுவான நன்மைக்கான கொள்கைகளுடன் செயல்படுவதே உங்கள் பணியாக இருக்க வேண்டும்.
மாண்புமிகு உறுப்பினர்களே!
நமக்கு வளமான வரலாறு, 5000 ஆண்டுகள் நாகரிகம் உள்ளது. பழங்காலத்திலிருந்தே இந்தியா ஜனநாயக விழுமியங்களில் ஆழமாக வேரூன்றி உள்ளது.
பண்டைய காலங்களிலிருந்து இந்தியாவில் சிறந்த நெறிமுறைகளும் ஒழுக்கநெறிகளும் பொது வாழ்க்கையின் அடையாளமாக இருந்து வருகின்றன. அறமும் ஒழுக்கமும் மனித நடத்தையின் சாரம்சமாகும். இவை பொது வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சங்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகச்சிறந்த அம்சங்கள்.
ஜனநாயக விழுமியங்கள் தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளான நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் ஒத்துழைப்பும், உயர்ந்த ஒழுக்க நெறிகளும் இருந்தால்தான் ஜனநாயக விழுமியங்கள் மலரும்.
தற்போது நமது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் இடையூறுகள் விளைவிக்கப்படுகின்றன. கட்சிகளுக்கிடையே ஆக்கப்பூர்வமான உரையாடல் இல்லை. சபையின் அனைத்து தரப்பினருக்கும் இடையில் நட்புரீதியான ஒத்துழைப்பும் உரையாடலும் இருக்க வேண்டும்.
ஒழுக்கம் ஜனநாயகத்தின் இதயமும் ஆன்மாவும் ஆகும். ஜனநாயகம் என்பது உரையாடல், விவாதம் ஆகியவற்றில் செழித்து வளரும் ஒரு அமைப்பு.
நாம் எப்போதும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும். மாற்றுக் கருத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாற்றுக்கருத்தைப் பரிசீலிக்காமல் உடனடியாக நிராகரிப்பது ஜனநாயக விவாதத்திற்கு எதிரானது.
வரலாற்று ரீதியாக, நமது சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் பெரும்பாலும் அமைதியான, நிதானமான முறையில் செயல்பட்டுள்ளன. அரசியல் நிர்ணய சபையின் குறிப்பிடத்தக்க, திறமையான செயல்பாடு நமது முன்மாதிரியாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை முடக்குவது நமது அரசியலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
நமது நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் ஜனநாயக மாண்புகளையும், மரபுகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டியது இன்றியமையாத தேவையாக உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்குள் தீவிரமாக விவாதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவையிலும் எனது அறையிலும் நான் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் திறமையானவர்கள், அர்ப்பணிப்புள்ளவர்கள். ஆனால் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்குமாறு கட்சி கட்டளையிட்டு இருக்கிறது என்று சிலர் சொல்வார்கள். உறுப்பினர்களின் நிர்பந்தத்தை இப்போது உணர்கிறேன். உங்களது கட்சி அப்படிக் கட்டளையிட்டிருக்கிறது.
நான் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் நமது ஜனநாயகத்தின் 75-வது ஆண்டில் இருக்கிறோம். 2047-ம் ஆண்டில் நாடு சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம். அப்போது நாம் வளர்ச்சி அடைந்த நாடாக இருப்போம். 2047-ம் ஆண்டிற்கான மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. நீங்கள் அனைவரும் அந்த மாரத்தான் ஓட்டத்தின் மிக முக்கியமான பங்குதாரர்கள். எனவே, நீங்கள் முன்னுதாரணமாக வழிநடத்த வேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் உறுப்பினர்களிடையே ஆழமான ஒழுக்க உணர்வை வளர்க்க வேண்டும். சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டுமே தவிர, இடையூறு விளைவிப்பவர்களை ஊக்குவிக்கக் கூடாது.
வளம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை நோக்கிய தொடர்ச்சியான பயணத்தில் மகாராஷ்டிராவின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மாநில மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
***
நன்றி
ஜெய் ஹிந்த்.
(Release ID: 2032521)
VL/PLM/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2032621)
வருகையாளர் எண்ணிக்கை : 112