வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பிரதமர் விரைவு சக்தியின் கீழ் உள்ள போக்குவரத்து திட்டமிடல் குழுவின் 74-வது கூட்டம் 5 முக்கிய அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களை அடையாளம் கண்டது

Posted On: 10 JUL 2024 4:39PM by PIB Chennai

பிரதமர் விரைவு சக்தியின் கீழ் உள்ள போக்குவரத்து திட்டமிடல் குழுவின் 74-வது கூட்டம், தொழில்துறை, உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளர் திரு ராஜீவ் சிங் தாக்கூர் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. ரயில்வே அமைச்சகம், சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகம், வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றிலிருந்து  5 முக்கிய அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களை அடையாளம் காண்பதில் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது. பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் ஒருங்கிணைந்த திட்டமிடல் கோட்பாடுகளுக்கேற்ப, இந்தத் திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் 11 நிலக்கரி படுகைகளுக்கு ரயில் போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ரூ.1404 கோடி செலவு பிடிக்கும் 49.58 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்பாதை அமைக்கும் திட்டம் இவற்றில் ஒன்றாகும்.

ஒடிசாவின் மகாநதி ஆற்றுப்படுகையிலிருந்து நிலக்கரி எடுப்பதற்கு உதவியாக ரூ.3,478 கோடி செலவில் 106 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைப்பது மற்றொரு திட்டமாகும்.

உத்தரப்பிரதேசத்தில் லக்னோ நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைகளை ஈடுசெய்வதற்காக லக்னோ மெட்ரோ வழித்தடத்தை 11.165 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பதற்கான திட்டமும் இந்தக் கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது. இதற்கு ரூ.5801 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இரண்டு திட்டங்களும் அடையாளம் காணப்பட்டன.

***

SMB/RS/DL



(Release ID: 2032191) Visitor Counter : 37