புவி அறிவியல் அமைச்சகம்

தேசிய அதிகார வரம்பைத் தாண்டி பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 08 JUL 2024 7:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய அதிகார வரம்பைத் தாண்டி பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவு தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும்.

 

பெரும்பாலும் 'உயர் கடல்கள்' என்று குறிப்பிடப்படும் பகுதிகள், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் உள்ள உலகளாவிய பொதுவான பெருங்கடல்கள் ஆகும். அவை கப்பல் போக்குவரத்து, வான்வழிப் பயணம், நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் மற்றும் குழாய்கள் அமைப்பது போன்ற சட்டப்பூர்வமான சர்வதேச நோக்கங்களுக்காக அனைவருக்கும் உரிமை உள்ளவையாக உள்ளன. இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் புவி அறிவியல் அமைச்சகம் தலைமை வகிக்கும்.

 

புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பின்னர் தேவையான சட்ட செயல்முறைகள் மூலம் அது உறுதிப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

இதில் உள்ள நன்மைகள் குறித்து புவி அறிவியல் துறை செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் கூறுகையில், இந்த ஒப்பந்தம் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளில் நமது உத்தி சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்தும் என்றார்.

 

***

(Release ID:2031611)
PKV/PLM/KR



(Release ID: 2031676) Visitor Counter : 32