குடியரசுத் தலைவர் செயலகம்

புவனேஸ்வர் அருகே ஹரிடமடா கிராமத்தில் பிரம்ம குமாரிகளின் தெய்வீக தியான மையத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைத்து, 'நிலைத்தன்மைக்கான வாழ்க்கை முறை' என்ற தேசிய இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்

Posted On: 08 JUL 2024 7:39PM by PIB Chennai

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ள ஹரிடா கிராமத்தில் பிரம்ம குமாரிகளின் தெய்வீக தியான மையத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூலை 8, 2024) திறந்து வைத்தார். பிரம்ம குமாரிகளின் 'நிலைத்தன்மைக்கான வாழ்க்கை முறை' என்ற தேசிய இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இயற்கை அன்னை அருள் நிறைந்தவள் என்று குறிப்பிட்டார். காடுகள், மலைகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள், மழை, காற்று ஆகிய அனைத்தும் உயிரினங்கள் வாழ இன்றியமையாதவை என்று அவர் கூறினார். இயற்கை மனிதர்களின் தேவைகளுக்கானதே அன்றி பேராசைக்காக அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மனிதர்கள் தங்கள் இன்பத்திற்காக இயற்கையை சுரண்டுகிறார்கள் என்றும், இதன் மூலம், இயற்கையின் கோபத்திற்கு ஆளாவதாகவும் அவர் கூறினார். இயற்கையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும், இயற்கைக்கு உகந்த வாழ்க்கையை வாழ்வதும் காலத்தின் தேவை என்று அவர் குறிப்பிட்டார்.

இயற்கையுடன் இணக்கமான வாழ்க்கை முறையை இந்தியக் கலாச்சாரம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது தத்துவத்தில் பூமியை தாய் என்றும், வானத்தை தந்தை என்றும் கூறுவதாக அவர் குறிப்பிட்டார். நீரை உயிர் என்பார்கள். மழையை இந்திரனாகவும், கடலை வருணனாகவும் வழிபடுகிறோம். நம் கதைகளில் மலைகளும் மரங்களும் நகர்கின்றன, விலங்குகள் கூட ஒன்றோடொன்று பேசுகின்றன. அதாவது, இயற்கைப் செயலற்றது அல்ல, அதற்குள் உணர்வின் சக்தியும் உள்ளது. இவையெல்லாம் இயற்கையைப் பாதுகாக்க இந்திய தத்துவ ஞானிகள் செய்த அழகான சிந்தனைகள் என்று அவர் விளக்கினார்.

பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், வானிலை குறித்த நிலையற்ற தன்மை ஆகியவை தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் என்று குடியரசுத் தலைவர் கூறினார். வெள்ளம், நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள், பூகம்பங்கள், காட்டுத் தீ, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் தற்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாக மாறி விட்டன என்று அவர் தெரிவித்தார்.

நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் சமுதாயத்தில் பெரிய மாற்றங்களுக்கு வழி வகுக்கின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். இயற்கை வளங்களின் குறைந்தபட்ச பயன்பாட்டை உறுதி செய்ய நமது பழக்கங்களை மாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இயற்கைக்கு உகந்த வாழ்க்கை முறையைப் பற்றி விவாதித்தால் மட்டும் போதாது, அதை நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இயற்கை வளங்களை பாதுகாக்க அனைவரும் அதனை பாதுகாக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

***

SMB/IR/AG/DL



(Release ID: 2031624) Visitor Counter : 47