மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

உலக விலங்கு வழி நோய்கள் தினத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: விலங்குகளுக்கு வரும் அனைத்து நோய்களும் மனிதர்களுக்குப் பரவக் கூடியது அல்ல

Posted On: 07 JUL 2024 1:29PM by PIB Chennai

உலக விலங்கு வழி நோய்கள் (ஜூனோசெஸ்) தினம் நேற்று (ஜூலை 06) கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் தலைமையில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் விலங்கு வழி நோய்கள் குறித்தும் எந்தெந்த நோய்கள் மனிதர்களுக்கப் பரவும், எவை பரவாது என்பது குறித்து விளக்கப்பட்டது.

ரேபிஸ், ஆந்த்ராக்ஸ், இன்ஃப்ளூயன்ஸா (ஹெச்1என்1 மற்றும் ஹெச்5என்1), நிபா, கொவிட்-19, ப்ரூசெல்லோசிஸ்காசநோய் போன்றவை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் பரவக்கூடிய தொற்று நோய்கள் (ஜூனோசெஸ்) ஆகும். இந்த நோய்கள் பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்க்கிருமிகளால் ஏற்படுகின்றன.

இருப்பினும், அனைத்து விலங்கு நோய்களும் ஜூனோடிக் எனப்படும் மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் அல்ல. பல நோய்கள் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் கால்நடைகளை மட்டும் பாதிக்கின்றன. இந்த ஜூனோடிக் அல்லாத நோய்கள், இனங்கள் சார்ந்தவை; மனிதர்களை பாதிக்காத நோய்கள். கோமாரி நோய், கோழிக்கழிச்சல் நோய் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இந்தியா 536 மில்லியன் கால்நடைகள் மற்றும் 851 மில்லியன் கோழிகளுடன் மிகப்பெரிய கால்நடை எண்ணிக்கையைக் கொண்டுள்ளது, இது உலகக் கால்நடைகள்கோழிகள்  எண்ணிக்கையில் முறையே சுமார் 11 சதவீதமும்  18 சதவீதமும் ஆகும். இந்தியா மிகப்பெரிய பால் உற்பத்தியாளராகவும், உலக அளவில் இரண்டாவது பெரிய முட்டை உற்பத்தியாளராகவும் உள்ளது.

மனிதர்களுக்கும் விலகினங்களுக்கும் இடையே பரவும் நோய்களைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும்  தடுப்பூசி, நல்ல சுகாதாரம், கால்நடை பராமரிப்பு முறைகள், கொசுக்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.

1885 ஜூலை 6 அன்று வெறி நாய்க் கடிக்கான தடுப்பூசியை லூயி பாஸ்டர் வெற்றிகரதாகக் கண்டறிந்ததை நினைவுகூரும் வகையில் உலக ஜூனோசெஸ் எனப்படும் விலங்கு வழி நோய்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்களான ஜூனோசெஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

***

SMB/PLM/KV

 



(Release ID: 2031419) Visitor Counter : 66