இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் பங்கேற்க உள்ள இந்தியக் குழுவினரை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஊக்கப்படுத்தினார்

Posted On: 30 JUN 2024 8:06PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று இந்திய ஒலிம்பிக் சங்கம்  ஏற்பாடு செய்திருந்த வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார். அவருடன் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் டாக்டர் பி டி உஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வீரர்களின் உடை, விளையாட்டு உபகரணம், காலணி, பயணப்பெட்டிகள் ஆகியவற்றை மத்திய அமைச்சர்கள் வழங்கினார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வழியனுப்பு விழாவில் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவில் கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் பங்கேற்கும் நாட்டின் வீரர்களை அனைத்து இந்தியர்களும் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டார்.

விளையாட்டுத்துறையில் இந்தியாவின் வளர்ச்சியை இந்தக் குழுவினர் மேலும் நீட்டிக்கச் செய்வார்கள் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். 2016-ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நாம் 2 பதக்கங்களை வென்ற நிலையில் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் 7 பதக்கங்கள் வென்றதால் பதக்கப் பட்டியலில் 67-ம் இடத்திலிருந்து 48-ம் இடத்திற்கு முன்னேற முடிந்ததாக அவர் கூறினார். இம்முறை பதக்கப் பட்டியலில் இந்தியா மேலும் முன்னேற நமது வீரர்கள் உதவுவார்கள் என்று  தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

-------

(Release ID: 2029770)

SMB/KPG/RR



(Release ID: 2030007) Visitor Counter : 18