விண்வெளித்துறை
இஸ்ரோ உருவாக்கிய கிராமப்புற நிலப் பதிவுக்கான புவன் பஞ்சாயத்து 4.0, அவசரகால மேலாண்மைக்கான தேசிய தரவுத்தளம் 5.0 ஆகிய இரண்டு புவிசார் இணையதளங்களை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
28 JUN 2024 7:51PM by PIB Chennai
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ உருவாக்கிய 'புவன் பஞ்சாயத்து4.0, அவசரகால மேலாண்மைக்கான தேசிய தரவுத்தளம் 5.0 ஆகிய இரண்டு புதிய தகவல் இணையதளங்களை மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லி பிரித்வி பவனில் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக இந்த இணையதளங்களின் தொடக்கம் அமைந்துள்ளது என்று கூறினார்
இந்த தளங்களை உருவாக்கியதற்காக இஸ்ரோ குழுவினரைப் பாராட்டிய அமைச்சர், விண்வெளி-தொழில்நுட்பம் இப்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்துள்ளது என்றார். விண்வெளித் துறை வளர்ச்சி சாதாரண மக்களின் வாழ்க்கையில் பன்முக தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
கிராமப் புற ஊராட்சிகளில் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு 'புவன் பஞ்சாயத்து தளம் உதவும் எனவும், நிலப் பதிவுகளுக்கு உள்ளூர் நிர்வாகத்தை சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை இது குறைப்பதோடு அடிதள நிலையில் ஊழலைக் குறைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இயற்கைப் பேரிடர்கள் குறித்த விண்வெளி அடிப்படையிலான உள்ளீடுகளை வழங்குகின்ற பேரிடர் அபாய குறைப்புக்கு உதவுகின்ற அவசரகால மேலாண்மைக்கான தேசிய தரவுத்தளம் 5.0 இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரோ தலைவர் திரு சோமநாத், பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் திரு ரவிச்சந்திரன், உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு எஸ்.கே.ஜிண்டால் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
*****
ANU/SMB/PLM/KV
(Release ID: 2029511)
Visitor Counter : 66