பிரதமர் அலுவலகம்

மக்களவைத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு அவையில் பிரதமர் உரை


"17 வது மக்களவை மாற்றத்திற்கான பல முயற்சிகளைக் கொண்டதாக அமைந்தது "

"நாடாளுமன்றம் என்பது வெறும் கட்டடமல்ல, அது 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மையமாகும்"

Posted On: 26 JUN 2024 12:11PM by PIB Chennai

மக்களவைத் தலைவராக திரு ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

திரு பிர்லா தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். அவையின் வாழ்த்துகளை மக்களவைத் தலைவரிடம் அவர் தெரிவித்தார். அமிர்த காலத்தின் போது திரு ஓம் பிர்லா, 2-வது முறையாக பொறுப்பேற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். தமது ஐந்தாண்டு கால அனுபவமும், உறுப்பினர்களின் அனுபவமும் இந்த முக்கியமான காலங்களில் அவையை வழிநடத்த மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  மக்களைவைத் தலைவருக்கு உதவும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.  மக்களவைத் தலைவரின் பணிவான குணம் மற்றும் அவரது ஆளுமை அவையை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவருக்கு உதவும் என்று பிரதமர் தெரிவித்தார்.

மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவைத் தலைவர் தொடர்ந்து புதிய வெற்றிகளைப் பெறுவார் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மக்களவைத் தலைவர் பதவியை வகித்த பின்னர் மீ்ண்டும் அவைத் தலைவராக முதல் முறையாக திரு பல்ராம் ஜக்கர்  தேர்வு செய்யப்பட்டதாகவும், தற்போது 17-வது மக்களவையை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், 18-வது மக்களவையை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை இன்று திரு ஓம் பிர்லா பெற்றுள்ளார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.   கடந்த 20 ஆண்டுகளில் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவில்லை என்றும் தற்போது திரு ஓம் பிர்லா அவைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டு வரலாறு படைத்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினராக அவைத்தலைவரின் செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் பேசினார். திரு ஓம் பிர்லா தமது தொகுதியில் நற்பெயர் பெற்றுள்ளதையும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். தமது தொகுதியான கோட்டாவின் கிராமப்புறங்களின் சிறந்த சுகாதார சேவைகளை செயல்படுத்துவதில் திரு ஓம் பிர்லா ஆற்றிய நல்ல பணிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். திரு ஓம்  பிர்லா தமது தொகுதியில் விளையாட்டை ஊக்குவித்து வருவதற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த மக்களவையில் திரு பிர்லாவின் தலைமையை நினைவுகூர்ந்த பிரதமர், அது நமது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பொற்காலம் என்று குறிப்பிட்டார். 17-வது மக்களவையில் எடுக்கப்பட்ட மாற்றத்துக்கான முடிவுகளை நினைவுகூர்ந்த பிரதமர், மக்களவைத் தலைவரின் தலைமையைப் பாராட்டினார். மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா,  இந்திய நீதிச் சட்டம், இந்திய சிவில் உரிமைப் பாதுகாப்புச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, போன்றவை அனைத்தும் திரு ஓம் பிர்லாவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாக்கள் என்று பிரதமர் கூறினார்.

ஜனநாயகத்தின் நீண்ட பயணத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதாகவும், அவை புதிய சாதனைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை அளிக்கின்றன என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவை நவீன தேசமாக மாற்றுவதற்கு 17-வது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பணிகளைப் பாராட்டிய அவர், 17-வது மக்களவையை அதன் சாதனைகளுக்காக எதிர்காலத்தில் இந்திய மக்கள் தொடர்ந்து போற்றுவார்கள் என்று தெரிவித்தார். அவைத் தலைவரின்  வழிகாட்டுதலின் கீழ் புதிய நாடாளுமன்றம் அமிர்த காலத்தில் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார். தற்போதைய அவைத்தலைவர் தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டதை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, ஜனநாயக வழிமுறைகளின் அடித்தளத்தை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பாராட்டினார். அவையில் விவாதங்களை அதிகரிக்க அவைத்தலைவர் தொடங்கிய காகிதமற்ற வகையில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகளையும் பிரதமர் பாராட்டினார்.

அதிக எண்ணிக்கையிலான நாடுகள் கலந்து கொண்ட ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற அமைப்புகளின் தலைவர்களைக் கொண்ட மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக அவைத்தலைவரைப் பிரதமர் பாராட்டினார்.

நாடாளுமன்ற வளாகம் வெறும் கட்டடம் அல்ல என்றும், 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் மையமாகவும் திகழ்கிறது என்று பிரதமர் கூறினார். அவையின் செயல்பாடு, நடைமுறைகள் பொறுப்புணர்வு ஆகியவை நமது நாட்டில் ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆழப்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்தார். 17-வது மக்களவையின் செயல்திறன் 97 சதவீதமாக இருந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அவைத்தலைவர் உறுப்பினர்கள் மீது செலுத்திய தனிப்பட்ட அக்கறை குறித்தும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

அவையின் கண்ணியத்தை கட்டிக்காப்பதில் அவைத்தலைவர் காட்டிய அக்கறையையும், நடுநிலையையும் பிரதமர் பாராட்டினார், பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்த போது, மரபுகளைப் பேணி அவையின் விழுமியங்களை நிலைநிறுத்திய  அவைத்தலைவருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மக்களுக்கு சேவை செய்வதன் மூலமும், அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை நனவாக்குவதன் மூலமும் 18-வது மக்களவையின் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். திரு ஓம் பிர்லாவுக்கு மீண்டும் அதே முக்கியப்  பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர் தமது செயல்பாடுகள் மூலம் நாட்டை வெற்றியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல வாழ்த்துகளை தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

---- 


SMB/PLM/KPG/KV



(Release ID: 2028763) Visitor Counter : 44