தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வன உயிரினங்கள் குறித்த திரைப்படங்களின் இயக்குநர் திரு சுப்பையா நல்லமுத்து, 18வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் வி.சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்
Posted On:
15 JUN 2024 4:19PM by PIB Chennai
18-வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் வி சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பிரபல வன உயிரினங்கள் குறித்த திரைப்பட இயக்குநர் திரு சுப்பையா நல்லமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "இந்தப் பதிப்பில் மதிப்புமிக்க விருதை வென்ற நல்லமுத்துவை நான் வாழ்த்துகிறேன்" என்று கூறினார். வன உயிரின திரைப்படங்களில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் திரு சுப்பையா நல்லமுத்துவுக்கு எம்ஐஎஃப்எஃப் இந்த விருதை வழங்குகி கௌரவித்துள்ளது. மும்பையின் நாரிமன் பாயின்ட் பகுதியில் உள்ள நிகழ்த்து கலைகளுக்கான தேசிய மையத்தில் நடைபெற்ற, கதையல்லாத திரைப்படத்திற்கான தெற்காசியாவின் மிகப்பெரியதும், பழமையானதும் என அறியப்படுகின்ற மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் பிரமாண்ட தொடக்க நிகழ்வில் இந்த விருது திரு சுப்பையா நல்லமுத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வனவிலங்குகள் குறித்த திரைப்படத் தயாரிப்பில் அவரது மிகச்சிறந்த பங்களிப்புக்கான அங்கீகாரமாகும்.
இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான திரு சுப்பையா நல்லமுத்து சுற்றுச்சூழல் பற்றிய தொடர்களுக்காக பாண்டா விருது பெற்றவர். லிவிங் ஆன் தி எட்ஜ் என்ற இவரது படைப்பு மிகுந்த முக்கியத்தும் வாய்ந்ததாகும். அதிவிரைவு கேமராமேன் என்ற நிலையில் இவரது நிபுணத்துவம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணி வாய்ப்பை அளித்தது. வனவிலங்குகளை படம் படிப்பதில் அவரது அபரிமிதமான பங்களிப்பு உலகளாவிய பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது.
ராயல் பெங்கால் புலி மீதான அவரது ஆர்வம் புலியை மையப்படுத்திய ஐந்து ஆவணப்படங்களாக மாற்றம் கொண்டது. இந்தப் படங்கள், பிபிசி, நேஷனல் ஜியாகிரஃபிக் சேனல் ஆகியவற்றுக்காக தயாரிக்கப்பட்டன. டைகர் டைனாஸ்டி (2012-2013), டைகர் குயின் (2010), தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் ஃபேமஸ் டைகர் (2017) உள்ளிட்டவை இவரது மிகச்சிறந்த படைப்புகளாகும். சுற்றுச்சூழல் குறித்தும், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையேயான உரையாடல்கள் குறித்தும் ஏராளமான ஆவணப்படங்களை இவர் தயாரித்துள்ளார். இவற்றில் எர்த் ஃபைல் (2000) என்பதை பிபிசி வேர்ல்ட் நிறுவனத்திற்காகவும் தி வேர்ல்ட் கான் ஒயில்ட் (2001) என்பதை அனிமல் பிளானெட் நிறுவனத்திற்காகவும் தயாரித்துள்ளார். இந்தியாவில் வனவிலங்குகள் குறித்த படத்தயாரிப்பில் 4000 பிக்சல் அளவில் படப்பிடிப்பு செய்வதை முதல்முறையாக பயன்படுத்தியவர் திரு சுப்பையா நல்லமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் உட்பட ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை இவர் பெற்றுள்ளார். ஜாக்சன் ஹோல் வனவலங்கு திரைப்பட விழாவில் தொடர்ந்து நடுவராக இருந்து வருபவர். மேலும் இந்திய பனோரமா திரைப்பட விழாவில் (2021) நடுவர் குழு தலைவராகவும் பணியாற்றியவர்.
வி சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது பற்றி மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் ஒவ்வொரு முறையும், ஆவணப்படங்களுக்கு சிறந்த பங்களிப்பு செய்வதோடு, இந்தியாவில் அதன் வளர்ச்சிக்குப் பாடுபடுகின்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கு கௌரவம் மிக்க டாக்டர் வி சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இது 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசையும், கோப்பையையும், பாராட்டுப் பத்திரத்தையும் கொண்டதாகும். ஷியாம் பெனகல், விஜயா முலே உள்ளிட்ட பிரபல திரைப்படத் தயாரிப்பார்கள் முந்தைய ஆண்டுகளில் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். பழமை வாய்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் வி சாந்தாராம் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டுள்ளது.
*****
AD/PKV/DL
(Release ID: 2025556)
Visitor Counter : 70