கலாசாரத்துறை அமைச்சகம்

சன்சாத் தொலைக்காட்சியுடன் இந்திரா காந்தி தேசிய கலை மையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 13 JUN 2024 9:16PM by PIB Chennai

இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை மக்களுக்கு எளிதில் கொண்டு செல்லும் நோக்கத்துடன், இந்திரா காந்தி தேசிய கலை மையம் (ஐஜிஎன்சிஏ) மற்றும் சன்சாத் தொலைக்காட்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ஐஜிஎன்சிஏ தயாரிக்கும் நிகழ்ச்சிகள் சன்சாத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இதேபோல் சன்சாத் தொலைக்காட்சியும் ஐஜிஎன்சிஏ-வின் கலாச்சார ஆவண காப்பகங்களில் உள்ள உள்ளடக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் அதன் உறுப்பினர் செயலாளர் டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி, சன்சாத் தொலைக்காட்சி சார்பில் அதன் தலைமைச் செயல் அதிகாரி திரு ரஜத் புன்ஹானி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில், இந்திரா காந்தி தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் பிரியங்கா மிஸ்ரா, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் அனைத்துப் பிரிவுகளின் நிர்வாகத் துறை அதிகாரிகள், சன்சாத் தொலைக்காட்சியின் நிர்வாகப் பிரிவு இணைச் செயலாளர் திரு சுமந்த் நாராயண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி, சன்சாத் டிவி மற்றும் ஐஜிசிசிஏ இடையே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். எந்தவொரு கலையும் மக்களிடையே பரவலாகக் கொண்டு செல்லப்பட வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.  இதனைக் கருத்தில் கொண்டே இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கலை மற்றும் கலாச்சாரத்தின்  முக்கிய மையமாகத் திகழும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் படைப்புகள் சன்சாத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதன் மூலம் அவை பரவலாக மக்களைச் சென்றடையும் என்று அவர் கூறினார்.

சன்சாத் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி திரு  ரஜத் புன்ஹானி பேசுகையில், நமது கலாச்சாரப் பாரம்பரியத்தை மக்களிடையே மேலும் அதிக அளவில் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி இது என்று கூறினார்.

***

SMB/PLM/AG/KV

 



(Release ID: 2025288) Visitor Counter : 40


Read this release in: English , Khasi , Urdu , Hindi