வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எம்.டி.2 ரக அன்னாசிப்பழங்களை முதன்முதலில் அனுப்புகிறது ஏ.பி.இ.டி.ஏ.
Posted On:
13 JUN 2024 11:54AM by PIB Chennai
இந்தியாவின் புதிய பழ ஏற்றுமதித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஏபிஇடிஏ), எம்டி-2 ரக அன்னாசிப்பழங்களின் முதல் தொகுப்பை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்ய உதவியுள்ளது.
மதிப்புமிக்க எம்டி-2 ரக அன்னாசிப்பழங்களின் 8.7 மெட்ரிக் டன் (650 பெட்டிகள்) அடங்கிய இந்தத் தொகுப்பு, ஏபிஇடிஏ தலைவர் திரு அபிஷேக் தேவ், ஏபிஇடிஏ மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் - மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ஐசிஏஆர்- சிசிஏஆர்ஐ) ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
"இது இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி வரலாற்றில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது, இது உலகளாவிய சந்தைகளுக்கு பிரீமியம் தரமான அன்னாசிப்பழங்களை உற்பத்தி செய்து வழங்குவதற்கான எங்கள் திறனைக் காட்டுகிறது" என்று திரு அபிஷேக் தேவ் கூறினார். "எம்டி-2 ரக அன்னாசிப் பழங்கள் இனிப்பு மற்றும் தரத்திற்கு புகழ்பெற்றது, மேலும் அதை ஐக்கிய அரபு அமீரகச் சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அவர் கூறினார்.
எம்.டி-2 ரக அன்னாசிப்பழம், "கோல்டன் ரிப்" அல்லது "சூப்பர் ஸ்வீட்" என்றும் அழைக்கப்படுகிறது. கோஸ்டாரிகா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
மகாராஷ்டிராவின் கொங்கன் பிராந்தியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் எம்டி-2 ரக அன்னாசிப்பழத்திற்கான அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் கடல் நெறிமுறையை உருவாக்குவதற்கான அத்தியாவசிய தொழில்நுட்ப ஆதரவை ஐசிஏஆர்- சிசிஏஆர்ஐ வழங்கியது. ஒரு தனியார் நிறுவனம் உள்ளூர் விவசாயிகளுடன் இணைந்து 200 ஏக்கரில் இந்த ரகத்தை வெற்றிகரமாக வளர்த்து, உகந்த தரம் மற்றும் மகசூலை உறுதி செய்தது.
அறுவடை செய்யப்பட்ட அன்னாசிப்பழங்கள் கவனமாகத் தரம் பிரிக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு நவி மும்பையின் பன்வெலில் சேமிக்கப்பட்டன. அங்கிருந்து, சரக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வதற்காக ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தியாவிலிருந்து புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான அர்ப்பணிப்பு முயற்சிகளை ஏபிஇடிஏ தொடர்கிறது.
***
(Release ID: 2024918)
PKV/KPG/RR
(Release ID: 2024957)
Visitor Counter : 101