அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

நிலையான காந்த உற்பத்திக்கு மத்திய அரசின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நிதியுதவி அளித்துள்ளது

Posted On: 30 MAY 2024 3:20PM by PIB Chennai

அத்தியாவசியப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் தொழில்நுட்பங்களின் மேம்பாட்டு நோக்கத்துடன் ஹைதராபாதில் உள்ள மிட்வெஸ்ட் அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் நிதியுதவி வழங்க இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த உத்திசார்ந்த திட்டம் மின்-இயக்கப் பயன்பாடுகளுக்கு ஒருங்கிணைந்த கூறுகளான நியோடைமியம் பொருட்கள் மற்றும் அரிய வகை கனிமங்களைக் கொண்ட நிரந்தரக் காந்தங்களின் வணிக உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

இரும்பு அல்லாத தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் கே.பாலசுப்பிரமணியன் பேசுகையில், இந்தியாவில் ஒரு முன்னோடி முயற்சியான இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 150 -170 டன் ஆக்சைடிலிருந்து ஆண்டுக்கு 500 டன் காந்தங்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் இது நாட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் தொழிற்சாலை மற்றும் எந்திர வடிவமைப்பு காரணமாக மிகக் குறைந்த மூலதன முதலீட்டைக் கொண்ட இந்தத் திட்டம் பயனுடையதாக அமைகிறது. இந்திய அரிய கனிம வகை பொறியாளர்கள் லிமிடெட் என்ற நிறுவனம் மூலப்பொருட்களை வழங்குவதால், இந்தத் திட்டம் நிதி ரீதியாக மிகவும் சாத்தியமானதாக இருக்கும்.

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ்குமார் பதக் பேசுகையில், இந்த முன்முயற்சி உயர் செயல்திறன் கொண்ட காந்தங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான இந்தியாவின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றார். இது தேசியத் தேவைகளை நிவர்த்தி செய்வதோடு மின்-இயக்கம் மற்றும் தூய்மை எரிசக்திக்கான முக்கியப் பொருட்களில் நிலையான தொழில்நுட்பங்களை நோக்கிய உலகளாவிய மாற்றத்திற்கு பங்களிப்பு செய்கிறது என்றும் அவர் கூறினார்.

***

ANU/AD/SMB/KPG/KV



(Release ID: 2022219) Visitor Counter : 50