திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திறன் மேம்பாடு மற்றும் வாழ்நாள் கற்றலை மேம்படுத்த தேசிய திறன் மேம்பாட்டுக் கழகமும் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் உத்திசார் கூட்டாண்மையை உருவாக்கியுள்ளன

Posted On: 28 MAY 2024 8:07PM by PIB Chennai

திறன் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (என்.எஸ்.டி.சி), சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) ஆகியவை இந்தியாவிலும் உலகளவிலும் திறன் மேம்பாடு மற்றும் வாழ்நாள் கற்றலை மேம்படுத்துவதற்கான உத்திசார் கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பு உலகெங்கிலும் உள்ள தனிநபர்களை அத்தியாவசிய திறன்கள் மற்றும் தகுதிகளுடன் சித்தப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி மேம்படுத்தப்படும். மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி மற்றும் அமைச்சகத்தின் இதர அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சர்வதேச என்.எஸ்.டி.சியின் மேலாண் இயக்குநரும், என்.எஸ்.டி.சியின் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு வேத் மணி திவாரி,  சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வேலைவாய்ப்புக் கொள்கை, வேலை உருவாக்கம் மற்றும் வாழ்வாதாரத் துறையின் இயக்குநர் திரு சங்கோன் லீ ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்தக் கூட்டாண்மை, தேசிய மற்றும் சர்வதேச அளவில் திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் பயனுள்ள கொள்கைகள், ஆளுகை மற்றும் நிதி கட்டமைப்புகளை உருவாக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திறன் இந்தியா டிஜிட்டல் மையத்தை (எஸ்.ஐ.டி.ஹெச்) செயல்படுத்துவது, கூட்டாண்மையின் முக்கிய அம்சமாகும். இந்த டிஜிட்டல் மாற்றம், திறன் மேம்பாட்டு முயற்சிகளை நெறிப்படுத்தும், அவற்றின் செயல்திறன், அணுகல் மற்றும் உலகளாவிய தாக்கத்தை மேம்படுத்தும்.

இந்தக் கூட்டாண்மையைப் பாராட்டிய திரு அதுல் குமார் திவாரி, இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று திறன் இந்தியா டிஜிட்டல் மையத்தை ஏற்றுக்கொள்வதாகும் என்றார்.  சர்வதேச தொழிலாளர் அமைப்பின் உறுப்பு நாடுகளில் உள்ள அரசுகள், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் அமைப்புகள் செலவு குறைந்த மாதிரியின் அடிப்படையில் அமைப்புகள், செயல்முறைகள், திறன் விநியோகம் மற்றும் வேலைப் பொருத்தம் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்க எஸ்.ஐ.டி.ஹெச்-ஐப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். இந்த டிஜிட்டல் மாற்றம், திறன் மேம்பாட்டு முயற்சிகளின் செயல்திறனை மேம்படுத்தி, அவற்றை உலகளவில் அணுகக்கூடியதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

************

(Release ID: 2022002)

PKV/BR/RR


(Release ID: 2022040) Visitor Counter : 89