ஆயுஷ்

ஆயுர்வேதத்தின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் வகையில் "பிரகதி-2024" என்ற முன்முயற்சியை ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது

Posted On: 28 MAY 2024 4:58PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில்  "பிரகதி 2024" (ஆயுர்வேதக் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் மருந்து ஆராய்ச்சி) என்ற முன்முயற்சியை இன்று (28-05-2024) தொடங்கியுள்ளது. ஆயுர்வேதத் துறையில் கூட்டு ஆய்வுக்கு இது மிகவும் பயனுள்ள வாய்ப்பை வழங்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்ய ராஜேஷ் கொடேச்சா, ஆயுர்வேதத்தின் வளர்ச்சியில் தொழில்துறையின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். இத்துறையில் புத்தொழில் நிறுவனங்களின் வருகை மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை அளிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இந்தத் துறையை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் பரந்த திறன்கள் தேவை என்றார்.

பிரகதி-2024 அறிமுக  நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் தலைமை இயக்குநர் பேராசிரியர் ரபிநாராயண் ஆச்சார்யா, இந்தியாவிலும் உலகெங்கிலும் ஆயுர்வேத மருந்துகளின் தேவை அதிகரித்து வருவதாகக் கூறினார். இதைக் கருத்தில் கொண்டு பல முன்முயற்சிகளை இந்தக் கவுன்சில் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேதப் பிரிவு ஆலோசகர் டாக்டர் கௌஸ்துபா உபாத்யாயா பேசுகையில்,  ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் இறுதியில் சமூகத்திற்கு பயனளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். ஆராய்ச்சி அடிப்படையிலான, உயர்தர, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஆயுர்வேத தயாரிப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் 2024-25 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டமும் இந்த  நிகழ்வின் போது வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் 37 மருந்து நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், மேலாண்மை இயக்குநர்கள், ஆராய்ச்சிப் பிரிவுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி கவிதா கார்க் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

***

SRI/SMB/PLM/KV/DL



(Release ID: 2021978) Visitor Counter : 103