வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, டிஜிட்டல் வர்த்தகத்தில் திறந்த கட்டமைப்புக்கான புத்தொழில் பெருவிழா நிகழ்ச்சியை புதுதில்லியில் நடத்தியது

Posted On: 17 MAY 2024 4:07PM by PIB Chennai

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) இன்று (17.05.2024) புதுதில்லியில் டிஜிட்டல் வர்த்தகத்தில் திறந்த கட்டமைப்புக்கான புத்தொழில் பெருவிழா (ஓஎன்டிசி ஸ்டார்ட்அப் மஹோத்சவ்) என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது. டிபிஐஐடி-ன் இரண்டு முதன்மை முயற்சிகளான ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சி மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த கட்டமைப்பு (ஓஎன்டிசி) ஆகியவற்றின் முக்கியத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்பை ஊக்குவிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். ஓஎன்டிசி ஸ்டார்ட்அப் மஹோத்சவ் என்ற இந்த நிகழ்ச்சி இத்துறையில் உள்ள வாய்ப்புகளை, புத்தொழில் நிறுவனங்கள் அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.    

இந்த நிகழ்ச்சியில் நேரடியாகவும், காணொளி மூலமாகவும்  சுமார் 5,000 தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.

தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடனும், நாட்டில் வலுவான ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடனும் ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியை அரசு 16.01.2016 அன்று தொடங்கியது. 2016-ம் ஆண்டில் சுமார் 300 புத்தொழில் நிறுவனங்கள் இருந்தன. தற்போது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட  தொழில் நிறுவனங்களைக் கொண்ட உலகின் முன்னணி புத்தொழில் மையங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த புத்தொழில் நிறுவனங்கள் 55 க்கும் மேற்பட்ட துறைகளில் செயல்பட்டு 13 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

அரசின் மற்றொரு முக்கிய முயற்சியான, டிஜிட்டல் வர்த்தகத்தில் சிறந்த கட்டமைப்பு (ஓஎன்டிசி), 2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டிஜிட்டல் வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்தும் நோக்கத்துடன் இது தற்போது செயல்படுகிறது.

இ-காமர்ஸ் எனப்படும் மின் வணிகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான அரசின் புதுமையான முயற்சியான ஓஎன்டிசி இப்போது நாட்டின் புத்தொழில் சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று நடைபெற்ற ஸ்டார்ட்-அப் நிகழ்ச்சி மஹோத்சவம் இந்த இரு முன்முயற்சிகளுக்கு இடையேயான தொடர்பையும், ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கான படியாக அமைந்தது.

***

(Release ID: 2020896)

AD/PLM/AG/RR


(Release ID: 2020906) Visitor Counter : 92