நிதி அமைச்சகம்
இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையிலான 5 வது கூட்டு சுங்கக் குழு கூட்டம் மே 6-7 தேதிகளில் லடாக்கின் லேயில் நடைபெற்றது
Posted On:
07 MAY 2024 8:58PM by PIB Chennai
இந்தியா மற்றும் பூடான் இடையேயான 5 வது கூட்டு சுங்கக் குழு கூட்டம் 2024 மே 6, 7 தேதிகளில் லடாக்கின் லேயில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் சிறப்புச் செயலாளரும், உறுப்பினருமான திரு. சுர்ஜித் புஜாபால் மற்றும் ராயல் பூடான் அரசின் நிதி அமைச்சகத்தின் வருவாய் மற்றும் சுங்கத் துறையின் தலைமை இயக்குநர் திரு. சோனம் ஜம்ட்ஷோ ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர்.
5-வது கூட்டு கவுன்சில் கூட்டத்தில், புதிய நில சுங்க நிலையங்கள் திறப்பு, புதிய வர்த்தக வழித்தடங்களை அறிவித்தல், உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து நடைமுறைகளை ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல், கடத்தல் தடுப்பு, ஒருங்கிணைந்த எல்லை தாண்டிய மேலாண்மை, சுங்கத் தரவுகளின் வருகைக்கு முந்தைய பரிமாற்றம், சுங்க ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் மின்னணு சரக்கு அமைப்பின் கீழ் சரக்கு போக்குவரத்து போன்ற பல்வேறு இருதரப்பு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. .
பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் பூடான் சுங்க நிர்வாகத்திற்கு ஐஆர்எஸ் திட்டம் உட்பட பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மூலம் திறன் வளர்ப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை வழங்குவதில் தொடர்ந்து ஆதரவு அளித்ததற்காக இந்திய அரசுக்கும், குறிப்பாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்திற்கும் பூடான் நன்றி தெரிவித்தது. மேலும், பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் பூடானுடன் எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கி ஊக்குவித்ததற்காக இந்திய அரசுக்கு பூடான் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தது.
சுங்க நடைமுறைகளை மறுவரையறை செய்தல் மற்றும் மறுவடிவமைப்பு, சுங்க ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப எல்லை தாண்டிய வர்த்தக வசதி ஆகியவை தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இந்தியா-பூடான் கூட்டு சுங்கக் குழு கூட்டங்கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. நில எல்லைகளில் சுமூகமான சுங்க அனுமதிக்காக வர்த்தக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், இணைப்பை மேம்படுத்துவதிலும் இந்தக் கூட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேற்கு வங்கத்தில் 6 மற்றும் அசாம் மாநிலத்தில் 4 என இந்தியா-பூடான் எல்லையில் 10 நில சுங்க நிலையங்கள் உள்ளன.
இறக்குமதி ஆதாரமாகவும், ஏற்றுமதி இலக்காகவும் பூட்டானின் சிறந்த வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. 2014 முதல், பூட்டானுடனான இந்தியாவின் வர்த்தகம் 2014-15 ஆம் ஆண்டில் 484 மில்லியன் டாலரில் இருந்து 2022-23 ஆம் ஆண்டில் 1,615 மில்லியன் டாலராக மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இது பூட்டானின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் சுமார் 80% ஆகும். பூடான் நிலத்தால் சூழப்பட்ட நாடு என்பதால் சுங்க நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதுடன் அவை பூடானின் வர்த்தகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. பூடானுடனான தொடர்பை மேம்படுத்துவது இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' மற்றும் 'கிழக்கு நோக்கிய செயல்பாடு' கொள்கைக்கு முக்கியமானதாக உள்ளது.
இந்தக் கூட்டுக்குழு கூட்டம் நம்பிக்கையுடன் நிறைவடைந்தது. பரஸ்பர நலனுக்காக இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே புதிய பரஸ்பர அம்சங்களைக் கண்டறியவும், இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களுக்கு பதிலளிக்கவும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சமூக கண்டுபிடிப்புகள் தொடர்பான விரைவான மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன . பரஸ்பர செழிப்புக்காக சுங்கம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கான புதிய மேம்பாடுகளை பரிசீலிக்கவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
***
PKV/RR/KR
(Release ID: 2019910)
Visitor Counter : 74