பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், லே-யில் ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடினார்
Posted On:
24 MAR 2024 1:13PM by PIB Chennai
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று லே-யில் வீரர்களுடன் வண்ணங்களின் பண்டிகையான ஹோலியைக் கொண்டாடினார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
வீரர்களிடையே உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர், தாய்நாட்டைப் பாதுகாக்க கடுமையான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை சூழல்களில் பணியாற்றும் அவர்களின் வீரம், உறுதிப்பாடு மற்றும் தியாகத்தைப் பாராட்டினார். மைனஸ் வெப்பநிலையில், அதிக உயரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வீரர்களின் நேர்மறையான அர்ப்பணிப்பு மிகவும் வலுவானது என்று அவர் கூறினார். தில்லி தேசியத் தலைநகராகவும், மும்பை நிதித் தலைநகரமாகவும், பெங்களூரு தொழில்நுட்பத் தலைநகரமாகவும் இருப்பது போல, லடாக்கை இந்தியாவின் வீரம் மற்றும் துணிச்சலின் தலைநகரம் என்று அவர் குறிப்பிட்டார்.
"நமது துணிச்சலான வீரர்கள் எல்லைகளைப் பாதுகாப்பதால் முழு நாடும் பாதுகாப்பாக உணர்கிறது. எல்லைகளில் விழிப்புடன் நிற்கும் நமது ராணுவ வீரர்களால் நாம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். ஒவ்வொரு குடிமகனும் ஆயுதப்படையினர் குறித்து பெருமிதம் கொள்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு வெகு தொலைவில் வசிக்கிறார்கள், இதன் மூலம் நாம் ஹோலி மற்றும் பிற பண்டிகைகளை நமது குடும்பங்களுடன் அமைதியாகக் கொண்டாடுகிறோம். நமது வீரர்களுக்கு தேசம் என்றென்றும் கடன்பட்டிருக்கும், அவர்களின் தைரியமும் தியாகங்களும் எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்" என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
பண்டிகைகள் முதலில் நாட்டின் பாதுகாவலர்களுடன் கொண்டாடப்பட வேண்டும் என்று நம்புவதால், ஒரு நாள் முன்னதாகவே வீரர்களுடன் ஹோலி கொண்டாட முடிவு செய்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சர் வலியுறுத்தினார். ஒரு நாள் முன்னதாக வீரர்களுடன் திருவிழா கொண்டாட்டங்களைத் தொடங்குவதற்கான புதிய பாரம்பரியத்தை உருவாக்குமாறு முப்படைகளின் தளபதிகளை அவர் வலியுறுத்தினார். "கார்கிலின் பனிச் சிகரங்களிலும், ராஜஸ்தானின் சுட்டெரிக்கும் சமவெளிகளிலும், ஆழ்கடலில் அமைந்துள்ள நீர்மூழ்கிக் கப்பல்களிலும் வீரர்களுடன் இதுபோன்ற கொண்டாட்டங்கள் நமது கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற வேண்டும்" என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, திரு ராஜ்நாத் சிங், லே-யில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து, தேச சேவையில் மிக உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ள வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் தொலைபேசியில் பேசி ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். விரைவில் சியாச்சின் சென்று அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக அவர்களிடம் தெரிவித்தார். திரு. ராஜ்நாத் சிங் சியாச்சின் சென்று அங்குள்ள துருப்புக்களுடன் ஹோலி கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக, நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டது, இதனால், அவர் லே-யில் வீரர்களுடன் வண்ணங்களின் திருவிழாவைக் கொண்டாடினார்.
PKV/KRS
(Release ID: 2016273)
Visitor Counter : 98