பிரதமர் அலுவலகம்
சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
"இந்தியா 11-வது பெரிய பொருளாதாரத்திலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் 5-வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளது"
"கழிவுகளைக் குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்பது இந்தியாவின் பாரம்பரிய வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும்"
"இந்தியா ஒவ்வொரு திட்டத்தையும் அளவிலும், வேகத்திலும், எண்ணிக்கையிலும் தரத்துடனும் செயல்படுத்துகிறது"
Posted On:
14 FEB 2024 8:18PM by PIB Chennai
சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14-02-2024) உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சர்வதேச எரிசக்தி முகமை நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதற்காகப் பாராட்டுத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும் அயர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
நீடித்த வளர்ச்சிக்கு எரிசக்திப் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், 11-வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, கடந்த 10-ம் ஆண்டில் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருப்பதை சுட்டிக்காட்டினார். இதற்கு எரிசக்திப் பாதுகாப்பும் முக்கியப் பங்கு வகித்துள்ளதாக அவர் கூறினார். இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் சூரியசக்தித் திறன் 26 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் இரட்டிப்பாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்த செயல்முறைகளின் இலக்கை, நிர்ணயித்த காலக்கெடுவுக்கு முன்னதாகவே இந்தியா அடைந்துள்ளதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி மேலும் கூறினார்.
உலக மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் வசிப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், உலகின் மிகப்பெரிய எரிசக்தி முயற்சிகள் சிலவற்றையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் கார்பன் வெளியேற்றம், உலக அளவில் 4 சதவீதம் மட்டுமே என்பதை அவர் எடுத்துரைத்தார். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் கூட்டு ஒத்துழைப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை இந்தியா மேற்கொள்வதாகவும் இதில் இந்தியா உறுதியுடன் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு போன்ற முன்முயற்சிகளுக்கு இந்தியா ஏற்கெனவே தலைமை வகித்து அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியா தொடங்கியுள்ள சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், கூட்டு செயல்பாடுகளிலும், பூமியின் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறைகளிலும் கவனம் செலுத்துகிறது என அவர் தெரிவித்தார். கழிவுகளைக் குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி என்பது இந்தியாவின் பாரம்பரிய வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் போது உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி தொடங்கப்பட்டதை பிரதமர் குறிப்பிட்டார். இந்த முயற்சிக்கு ஆதரவளித்ததற்காக சர்வதேச எரிசக்தி முகமைக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
திறன் மேம்பாடு குறித்துப் பேசிய பிரதமர், 140 கோடி இந்திய மக்களின் திறமையை உலக அளவில் வெளிப்படுத்த தமது அரசு பணியாற்றுவதாகக் குறிப்பிட்டார். இந்தியா ஒவ்வொரு பணிக்கும் அளவையும் வேகத்தையும், தரத்தையும் நிர்ணயித்து அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார். எரிசக்தித் துறையில் இந்தியா ஒரு பெரிய பங்கு வகிப்பது சர்வதேச எரிசக்தி முகமைக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் நிலையிலான இந்தக் கூட்டம் வெற்றிகரமாக அமைய தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, தற்போதுள்ள ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், புதிய ஒத்துழைப்புகளை உருவாக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தூய்மையான, பசுமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகை உருவாக்குவோம் என்று கூறி, பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 2006076)
AD/PLM/RR
(Release ID: 2016043)
Visitor Counter : 77
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam