கலாசாரத்துறை அமைச்சகம்
தேசிய ஆவணக்காப்பாளர்கள் குழுவின் 47-வது கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெற்றது
Posted On:
20 MAR 2024 12:53PM by PIB Chennai
தேசிய ஆவண காப்பாளர்கள் குழுவின் 47-வது கூட்டம் 2024 மார்ச் 19 அன்று ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ காஷ்மீர் மாநாட்டு மையத்தில் நிறைவடைந்தது. இந்த இரண்டு நாள் கூட்டத்தில் தில்லி, கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, நாகாலாந்து, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேரடியாகப் பங்கேற்றனர். அதே நேரத்தில் ஹரியானா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது, பிரதிநிதிகள் தங்களது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆவணக்காப்பக நிர்வாகம், ஆவண மேலாண்மை அமைப்புக்கு புத்துயிர் அளிக்க தேவையான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர். இந்த நோக்கத்திற்காக டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்கள். நாட்டின் வளமான ஆவணப் பாரம்பரியத்தைப் பாதுகாத்துப் பகிர்ந்து கொள்ளவும், ஆவணக் காப்பக ஆதாரங்களை இணையதளம் மூலம் எளிதாக அணுகவும் கவனம் செலுத்தும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ளவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை வகுப்பதில் பிரதிநிதிகள் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் வழிகாட்டுதலையும் கோரினர்.
ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநரும், தேசிய ஆவணக் காப்பாளர்களின் குழுவின் தலைவரும், அமைப்பாளருமான திரு அருண் சிங்கால், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச ஆவணக் காப்பகங்களில் உள்ள பொது மற்றும் தனியார் ஆவணங்களில் உள்ள மதிப்புமிக்க தகவல்களை இணையதளம் மூலம் பயனர்கள் எளிதில் அணுகும் வகையில் ஜனநாயகமயமாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தேசிய ஆவணக்காப்பாளர்கள் குழுவின் அடுத்த கூட்டம் இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் நடைபெற உள்ளது.
***
PKV/IR/RS/KRS
(Release ID: 2015675)
Visitor Counter : 110