புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான சர்வதேச கூட்டாண்மையின் 5 நாள் 41 வது வழிகாட்டுதல் குழு கூட்டம் புதுதில்லியில் தொடங்கியது

Posted On: 19 MAR 2024 9:52AM by PIB Chennai

பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான சர்வதேச கூட்டாண்மையின் 41 வது வழிகாட்டுதல் குழுக் கூட்டம் மார்ச் 18 - 22 வரை புதுதில்லியில் நடைபெறுகிறது.

ஐந்து நாள் கூட்டத்தின் முதல் நாளான நேற்று, ஐஐடி தில்லியில் அகாடமிக் அவுட்ரீச் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டது.  அங்கு மாநாட்டு பிரதிநிதிகள் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தொழில்நுட்பங்களின் எதிர்காலம் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கினர்.

தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் சூட், ஹைட்ரஜன் மிகவும் புதிய தொழில்நுட்பம் அல்ல என்றாலும், அதை மிகவும் சிக்கனமாகவும் தூய்மையாகவும் மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று சுட்டிக்காட்டினார். இத்துறையில் திறன்மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தவிர, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் பசுமை ஹைட்ரஜனை ஏற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். ஹைட்ரஜன் மதிப்புச் சங்கிலியில் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகிய ஐந்து கூறுகள் அடங்கும் என்று முதன்மை அறிவியல் ஆலோசகர் எடுத்துரைத்தார்.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சுதீப் ஜெயின், பருவநிலை மாற்றத்தின் முக்கியத்துவம் மற்றும் சவாலான தன்மை குறித்து எடுத்துரைத்தார். ஹைட்ரஜன் துறையின் ஆற்றல் மாற்றம் மற்றும் மேம்பாட்டை எளிதாக்குவதற்கு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து தேவைப்படும் பணி, ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார். சாம்பல் ஹைட்ரஜனில் இருந்து விலகி, பசுமை ஹைட்ரஜனின் அதிகப் பங்கைக் கொண்டுவருவதன் முக்கியத்துவம் குறித்து அவர் குறிப்பிட்டார்.

வழிகாட்டுதல் குழுவின் துணைத் தலைவர் திரு. நோ வான் ஹல்ஸ்ட், இந்தியா ஒரு பொருளாதார சக்தியாக உள்ளது, உலகப் பொருளாதாரத்தின் செயல்பாடு மற்றும் தூய்மையான எரிசக்தி எதிர்காலத்தை வடிவமைப்பதில் தீர்க்கமான பங்களிப்பதாகக் குறிப்பிட்டார். தூய்மையான ஹைட்ரஜனின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் திறன்கள், கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் தேவை மற்றும் இது தொடர்பாக கல்வியாளர்களின் பங்கு ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.

தில்லி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் டீன் (ஆர் & டி), பேராசிரியர் நரேஷ் பட்நாகர், கடந்த இரண்டு தசாப்தங்களாக ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஐஐடி தில்லியின் ஈடுபாட்டை எடுத்துரைத்தார். எரிசக்தி அமைப்புகளில் பல்வேறு பாடங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்டி நிலைகளில் நிறுவனம் வழங்கும் படிப்புகள் குறித்தும், ஐ.ஐ.டி தில்லியில் நடத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறித்தும் அவர் தெரிவித்தார்.

அவாடா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கிஷோர் நாயர், எரிசக்தி மாற்றத்திற்கான இந்தியா மற்றும் பிற நாடுகளின் முயற்சிகள் மற்றும் அவற்றின் நிகர பூஜ்ஜிய கடமைகள் குறித்து பேசினார். ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாடுகளை மிகவும் திறமையாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றுவதற்கான தொழில்நுட்ப யோசனைகளுடன் முன்வருமாறு கல்வியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பங்குதாரர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அஜய் யாதவ், எதிர்காலத்தின் மாற்று எரிபொருளாக பசுமை ஹைட்ரஜனின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு, தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் பசுமை ஹைட்ரஜனை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் சுவரொட்டி விளக்கக்காட்சிகள் மற்றும் ஒரு வினாடி வினா போட்டி உள்ளிட்ட சுவாரஸ்யமான நடவடிக்கைகளும் இடம்பெற்றன, இது ஒவ்வொரு போட்டியிலும் மூன்று வெற்றியாளர்களுக்கு அறிவிப்பு மற்றும் பரிசு விநியோகத்தில் முடிவடைந்தது.

ஐபிஎச்இ அகாடமிக் அவுட்ரீச் இரண்டு நுண்ணறிவுக் குழு விவாதங்களையும் கொண்டிருந்தது. "நிபுணத்துவத்தை மேம்படுத்துதல்: சுத்தமான / பசுமை ஹைட்ரஜன் அரங்கில் திறன் மேம்பாட்டை வளர்ப்பது" என்ற தலைப்பில் முதல் குழு விவாதம் சுத்தமான / பசுமை ஹைட்ரஜன் துறையில் செழித்து வளர தேவையான அறிவு மற்றும் திறன்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. பசுமை ஹைட்ரஜன் துறையில் திறமையான பணியாளர்களின் தேவை, வெவ்வேறு பாதுகாப்பு, ஒழுங்குமுறை தரநிலைகள் ஆகியவை தேவைப்படுவதை குழு எடுத்துரைத்தது. கருப்பொருள் பகுதிகளுக்கான புதிய திறன் தலையீடுகள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் துறைக்கான நேரடி பயிற்சி ஆகியவற்றின் அவசியத்தையும் குழு எடுத்துரைத்தது.

 

"எதிர்காலத்தை வெளிப்படுத்துதல்: சுத்தமான / பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் உருமாறும் பயன்பாடுகள்" என்ற தலைப்பில் இரண்டாவது குழு விவாதம், சுத்தமான / பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் எல்லைகளை ஆராய்ந்து, பல்வேறு தொழில்களில் அதன் உருமாறும் திறனைப் பற்றி விவாதித்தது. ஹைட்ரஜனின் தற்போதைய உற்பத்திச் செலவு, அதன் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் நுகர்வு ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. தொழில்நுட்ப மேம்பாடு, ஆர் & டி மூலம் திறமையான உற்பத்தி / பயன்பாடு மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் வழியாகத் தேவையை அதிகரிப்பதன் மூலம் இந்தச் செலவுகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தைக் குழு வலியுறுத்தியது.

ஐபிஎச்இ பற்றி 2003 இல் நிறுவப்பட்ட ஐபிஎச்இ, 23 உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தை உள்ளடக்கியதாகும். மேலும் உலகளவில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தொழில்நுட்பங்களை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இதன் வழிநடத்தல் குழுக் கூட்டங்கள், உறுப்பு நாடுகள், பங்குதாரர்கள் மற்றும் முடிவெடுப்பவர்களிடையே சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்கான ஒரு முக்கியமான தளமாகச் செயல்படுகின்றன. இந்தக் கூட்டங்கள் கொள்கை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த தகவல் பரிமாற்றத்திற்கு உதவுகின்றன.

***

(Release ID: 2015458)

PKV/ KV

 



(Release ID: 2015471) Visitor Counter : 75