பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 25 JAN 2024 4:42PM by PIB Chennai

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, மதிப்பிற்குரிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக் அவர்களே, மத்திய அமைச்சர் திரு. வி.கே. சிங் அவர்களே, புலந்த்ஷாஹரின் எனதருமை சகோதர, சகோதரிகளே!

வணக்கம்!

நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பும் நம்பிக்கையும் அளவிட முடியாதது. உங்கள் அளவற்ற பாசம் என்னை ஆழமாகத் தொட்டுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் இங்கு இருப்பதை நான் கவனித்தேன். அவர்கள் தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்துள்ளது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. அனைத்து பெண்களுக்கும் என் சிறப்பு வணக்கம்!

பகவான் ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக 22-ம் தேதி புனித அயோத்திக்கு விஜயம் செய்த நான், இப்போது இங்கு வரும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். இன்று, மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ரூ.19,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், பெட்ரோலிய குழாய்கள், நீர் மற்றும் கழிவுநீர் வசதிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தொழில்துறை தொடர்பானவை.  இந்த குறிப்பிடத்தக்க திட்டங்களுக்காக புலந்த்ஷாஹர் உட்பட மேற்கு உத்தரபிரதேசத்தில் வசிப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

சகோதர சகோதரிகளே,

ராமர் மற்றும் தேசத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த கல்யாண் சிங் ஜி போன்ற ஒரு மகத்தான மனிதரை இந்தப் பகுதி தேசத்திற்கு பரிசளித்துள்ளது. அவர் இப்போது நம்முடன் இல்லாவிட்டாலும், அயோத்தி தாமைப் பார்த்து அவரது ஆன்மா மகிழ்ந்திருக்கும். கல்யாண் சிங் அவர்களும், பலரும் கண்ட கனவை நாடு நனவாக்கியது நமது நல்வாய்ப்பாகும். இருப்பினும், ஒரு வலுவான தேசத்தை உருவாக்கி உண்மையான சமூக நீதியை அடைய வேண்டும் என்ற அவரது பார்வையை நிறைவேற்ற நாம் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பணியாற்ற வேண்டும்.

நண்பர்களே,

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே எங்கள் நோக்கம். அத்தகைய உயர்ந்த இலக்கை அடைவதற்கு ஒருங்கிணைந்த முயற்சியும் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் ஒன்றிணைப்பதும் அவசியம்.

நண்பர்களே

சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக, இந்தியாவின் வளர்ச்சி ஒரு சில பகுதிகளில் மட்டுமே குவிந்திருந்தது. அது நாட்டின் கணிசமான பகுதியை பின்தங்கச் செய்தது. நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசம் உரிய கவனத்தைப் பெறவில்லை. நாட்டின் மிகப்பெரிய மாநிலம் பலவீனமாக இருந்தால், நாடு எப்படி வலிமையாக இருக்கும்?  உத்தரபிரதேசத்தை முதலில் பலப்படுத்த வேண்டுமா இல்லையா? உத்தரப் பிரதேசத்துல் இருந்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக எனக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது.

என் குடும்ப உறுப்பினர்களே,

2017-ம் ஆண்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைந்தததிலிருந்து, உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்கு வேகம் பெற்றது. உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் வகையில் நவீன விரைவுச் சாலைகளை நாங்கள் இப்போது உருவாக்கி வருகிறோம்.  பாரதத்தின் முதல் நமோ பாரத் ரயில் திட்டம் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்கள் இப்போது மெட்ரோ ரயில் சேவை வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு வழித்தடங்களுக்கான மையமாக உத்தரப்பிரதேசம் உருவாகி வருகிறது.

நண்பர்களே,

அரசின் முயற்சிகள் காரணமாக, மேற்கு உத்தரப்பிரதேசம் இப்போது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான குறிப்பிடத்தக்க மையமாக உருவெடுத்துள்ளது. உலகின் முதன்மையான உற்பத்தி மற்றும் முதலீட்டு இடங்களுடன் போட்டியிடக்கூடிய நகரங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டில் நான்கு புதிய தொழில்துறை நவீன நகரங்களை உருவாக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இத்தகைய பொலிவுறு தொழில்துறை நகரங்களில் ஒன்று மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

முன்பு, போதுமான போக்குவரத்து இணைப்பு இல்லாத காரணத்தால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சரியான நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்வதில் சவால்களை எதிர்கொண்டனர். இதனால், விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு அதிகரித்தது. குறிப்பாக, கரும்பு விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டனர். வேளாண் விளைபொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் ஒரு கடினமான பணியாக இருந்தது. இந்த சவால்களுக்கு தீர்வு புதிய விமான நிலையங்கள் மற்றும் பிரத்யேக சரக்கு வழித்தடங்களை நிறுவுவதில் அமைந்துள்ளது. இப்போது, உத்தரப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும், உத்தரப்பிரதேச விவசாயிகளின் பழங்கள் மற்றும் காய்கறிகளும் வெளிநாட்டு சந்தைகளை மிகவும் வேகமாக சென்றடையும்.

என் குடும்ப உறுப்பினர்களே,

ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதே இரட்டை இன்ஜின் அரசின் நோக்கம். புதிய அரவைப் பருவத்தில் கரும்பின் கொள்முதல் விலையை உயர்த்தியதற்காக யோகி அரசை நான் பாராட்டுகிறேன்.  கரும்பு விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை போக்க இரட்டை இன்ஜின் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, எங்கள் அரசு எத்தனால் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கணிசமான கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

நண்பர்களே,

விவசாயிகளின் நலனுக்கு எங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.  விவசாயிகளுக்கு மலிவு விலை உரங்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக எங்கள் அரசு லட்சக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இன்று உலக சந்தையில் ரூ.3,000 வரை விற்கும் யூரியா மூட்டை, இந்திய விவசாயிகளுக்கு 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.   பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவுத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அரசு ரூ. 3 லட்சம் கோடியை செலுத்தியுள்ளது.

என் குடும்ப உறுப்பினர்களே,

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த பொருளாதாரத்தை கட்டமைப்பதில் நமது விவசாயிகளின் பங்களிப்பு சிறப்பானது.  கூட்டுறவு சங்கங்கள் போன்ற நிறுவனங்கள் சிறு விவசாயிகளை ஒரு வலிமையான சந்தை சக்தியாக மாற்றுகின்றன. இந்த கூட்டுறவு நிறுவனங்கள் சிறு விவசாயிகளுக்கும் அதிகாரம் அளிக்கும் சிறந்த அமைப்புகளாக செயல்படுகின்றன

நண்பர்களே,

விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதே எங்கள் முயற்சியாகும். இந்த முயற்சியில், கிராமங்களில் உள்ள பெண்களின் மகத்தான திறனை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மத்திய அரசு 'நமோ ட்ரோன் சகோதரி' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்  பயிற்சி அளிக்கப்பட்டு, ட்ரோன்கள் வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில், இந்த நமோ ட்ரோன் சகோதரிகள், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் விவசாயத் துறையில் ஒரு வலிமையான சக்தியாக மாறுவார்கள்.

நண்பர்களே,

விவசாயிகளின் நலனுக்காக இந்த அரசைப் போல வேறு எந்த அரசும் இதுவரை செய்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு மக்கள் நலத் திட்டத்திலிருந்தும் நமது சிறு விவசாயிகள் நேரடியாகப் பயனடைந்துள்ளனர்.  விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் இப்போது முதல் முறையாக ஓய்வூதிய வசதிகளைப் பெறுகிறார்கள். பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் சவாலான காலங்களில் விவசாயிகளுக்கு உதவுகிறது.

சகோதர சகோதரிகளே,

அரசுத் திட்டங்களின் பலன்கள் தகுதியான ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைவதை உறுதி செய்ய நாங்கள் தற்போது அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.  இது உண்மையான மதச்சார்பின்மையையும், உண்மையான சமூக நீதியையும் உள்ளடக்கியது.  சுதந்திரத்திற்குப் பிறகு, 'வறுமையை ஒழிப்போம்' என்ற வெற்று முழக்கங்கள் நீண்ட காலமாக எழுப்பப்பட்டன.  சாதாரண ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகாரம் பெறவில்லை. எனினும், நாட்டின் நிலைமை இப்போது மாறி வருகிறது. மோடி உங்கள் சேவையில் உண்மையாக ஈடுபட்டுள்ளார். எங்கள் அரசின் பத்தாண்டு கால ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளது ஒரு மகத்தான சாதனை. மீதமுள்ளவர்கள் தாங்களும் விரைவில் வறுமையிலிருந்து வெளியே வருவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

நண்பர்களே,

கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் உட்பட அனைவருக்கும் அதிகாரம் அளிக்க நடந்து வரும் இந்த இயக்கம் தொடரும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்.

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

பாரத் மாதா கி - ஜெ!

மிகவும் நன்றி!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

ANU/AD/PLM/DL


(Release ID: 2015328)