பாதுகாப்பு அமைச்சகம்

"லமிட்டியே பயிற்சி– 2024" என்ற கூட்டு ராணுவப் பயிற்சிக்காக செஷெல்ஸுக்குப் புறப்பட்டது, இந்திய ராணுவக் குழு

Posted On: 17 MAR 2024 10:51AM by PIB Chennai

இந்திய ராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு (எஸ்.டி.எஃப்) இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சியான "லமிட்டியே-2024" இன் பத்தாவது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழு இன்று செஷல்ஸுக்குப் புறப்பட்டது. இந்த கூட்டுப் பயிற்சி 2024 மார்ச் 18 முதல் 27 வரை செஷல்ஸில் நடத்தப்படும். கிரியோல் மொழியில் 'நட்பு' என்று பொருள்படும் ‘லமிட்டியே’ என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பயிற்சி நிகழ்வாகும், இது 2001 முதல் செஷெல்ஸில் நடத்தப்படுகிறது. இந்திய ராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளின் கோர்கா ரைபிள்ஸ் பிரிவில் இருந்து தலா 45 வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

அமைதி காக்கும் நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ், துணை நகர்ப்புற சூழலில்  மரபுசார் செயல்பாடுகளில் பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கமாகும். அமைதி காக்கும் நடவடிக்கைகளின் போது இரு தரப்புக்கும் இடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர செயல்பாட்டை இந்த பயிற்சி மேம்படுத்தும். இரு ராணுவங்களுக்கும் இடையே திறன்கள், அனுபவங்கள் மற்றும் நல்ல நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதோடு கூடுதலாக இருதரப்பு ராணுவ உறவுகளை உருவாக்கி மேம்படுத்தவும் இந்தப் பயிற்சி உதவும். 10 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் களப் பயிற்சி, போர் விவாதங்கள், விரிவுரைகள் மற்றும் செயல்விளக்கங்கள் ஆகியவை இடம்பெறும்.

இந்தப் பயிற்சி, பரஸ்பர புரிதலை வளர்ப்பதிலும், இரு நாட்டு துருப்புக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதிலும் பெரும் பங்களிப்பை அளிக்கும். இந்தப் பயிற்சி ஒத்துழைப்பு கூட்டாண்மையை வளர்ப்பதுடன், இரு தரப்பினருக்கும் இடையே சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளவும் உதவும்.

***

ANU/AD/BS/DL



(Release ID: 2015297) Visitor Counter : 136