பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவப் பயிற்சியின் போது மருத்துவ ரீதியாக ஊனமடையும் பயிற்சி வீரர்களுக்கும் மறுவாழ்வுக்கான வசதிகளை விரிவுபடுத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்
Posted On:
16 MAR 2024 1:18PM by PIB Chennai
ராணுவப் பயிற்சியின்போது மருத்துவ ரீதியாக உடல் ஊனமடையும் பயிற்சி வீரர்களுக்கு, மறுவாழ்வு வசதிகளை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். வீரர்கள் இளம் வயதிலேயே ஆயுதப் படைகளில் அதிகாரிகளாக சேரும் நோக்கத்துடன் ராணுவ அகாடமிகளில் சேரும் நிலையில், தேசத்திற்கு சேவை செய்யும் அவர்களது அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் வீரர்களுக்கு பலன்களை வழங்க, பல ஆண்டுகளாக, இது போன்ற பயிற்சி வீரர்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இத்தகைய மறுவாழ்வு வாய்ப்புகளைக் கோரி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், ராணுவ அகாடமிகளில் உள்ள இளம் வீரர்கள் ஆயுதப் படைகளில் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கல்வி மற்றும் ராணுவ பயிற்சிகளைப் பெறுகிறார்கள். தற்போதுள்ள விதிகளின்படி, அத்தகைய வீரர்கள், பயிற்சிகளுக்குப் பின்னரே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். கடுமையான ராணுவப் பயிற்சிகளின்போது, சில வீரர்கள் ஊனமடைந்து மருத்துவ ரீதியாக ராணுவத்தில் செயல்பட முடியாத சூழல் ஏற்படுகிறது.
அத்தகைய வீரர்களுக்கான (கேடட் - Cadet) எதிர்கால வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் முன்மொழிவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ராணுவத்தினரின் மறுவாழ்வு இயக்குநரகத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பலன்கள் இந்த பயிற்சி வீரர்களுக்கும் நீட்டிக்கப்படும். மருத்துவ ரீதியாக ஊனமுற்று, ராணுவத்தில் செயல்பட முடியாத 500 பயிற்சி வீரர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள். இதனால் அவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் உறுதி செய்யப்படும். இதேபோன்ற நிலையில் எதிர்காலத்தில் பயிற்சியின்போது வீரர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களும் இதே பலன்களைப் பெறுவார்கள்.
***
ANU/AD/PLM/DL
(Release ID: 2015169)
Visitor Counter : 82