குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – மொரீஷியஸ் உயர்மட்ட பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தைக்குக் குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு தலைமை வகித்தார் – மொரீஷியஸில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

Posted On: 13 MAR 2024 7:19PM by PIB Chennai

மொரீஷியஸுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு, தமது பயணத்தின் நிறைவு நாளான இன்று (மார்ச் 13, 2024) மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்துடன் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு நிலையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.  இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

  • இந்தியாவின் சர்வதேச நிதிச் சேவைகள் மைய  ஆணையம் (கிப்ட் சிட்டி) மற்றும் மொரீஷியஸின் நிதிச் சேவைகள் ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்;
  • மொரீஷியஸ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இந்தியாவின் மத்திய  அரசுப் பணியாளர் தேர்வாணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்;

 

  • இந்தியா-மொரீஷியஸ் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச தரநிலைகளுக்கு  இணங்கும்  வகையில்  திருத்தம் செய்வதற்கான நெறிமுறைகள் தொடர்பான ஒப்பந்தம்
  • இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை மற்றும் மொரீஷியஸ் ஊழல் தடுப்பு ஆணையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஆகிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்நிகழ்ச்சியின்போது, குடியரசுத் தலைவர் திருமதி திரெளபதி முர்மு மற்றும் மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் ஜுக்நாத் ஆகியோர் இணைந்து இந்திய அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட 14 சமூக மேம்பாட்டுத் திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தனர். மேலும் இந்தியா உதவியுடன் அமைக்கப்படவுள்ள புதிய தடய அறிவியல் ஆய்வகத்திற்கும் அவர்கள்  அடிக்கல் நாட்டினர்.

பின்னர், மொரீஷியஸ் அதிபர் திரு பிரித்விராஜ் சிங் ரூபன் அரசு இல்லத்தில் குடியரசுத் தலைவருக்கு மதிய உணவு விருந்தளித்தார்.

*******

Release ID: 2014333

AD/PLM/KRS


(Release ID: 2014401) Visitor Counter : 98


Read this release in: English , Urdu , Hindi , Punjabi