பிரதமர் அலுவலகம்

“வலுவான மகளிர் சக்தி – வளர்ச்சி அடைந்த பாரதம்” நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்


நமோ ட்ரோன் சகோதரிகள் வழங்கிய செயல்விளக்கத்தைப் பார்வையிட்டார்

1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ட்ரோன்களை வழங்கினார்

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8,000 கோடி வங்கிக் கடன்களையும், ரூ.2,000 கோடி மூலதன ஆதரவு நிதியையும் வழங்கினார்

லட்சாதிபதி சகோதரிகளை கெளரவித்தார்

"ட்ரோன் சகோதரிகள் மற்றும் லட்சாதிபதி சகோதரிகள் வெற்றியின் புதிய அத்தியாயங்களை எழுதுகின்றனர்"

"வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், மகளிர் சக்தியின் கண்ணியத்தை உறுதி செய்வதன் மூலமும் மட்டுமே எந்த ஒரு சமூகமும் முன்னேற முடியும்"

"கழிப்பறைகள், சானிட்டரி பேட்கள், புகை நிறைந்த சமையலறைகள், குடிநீர்க் குழாய் இணைப்பு போன்றவற்றை செங்கோட்டையில் இருந்து பேசிய முதல் பிரதமர் நான்தான்"

"மோடியின் திட்டங்கள் அன்றாட வாழ்க்கையில் வேரூன்றிய அனுபவங்களிலிருந்து வெளிவந்தவை"

"விவசாயத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் செல்வாக்கு பெண்களால் வழிநடத்தப்படுகிறது"

"நாட்டில் தொழில்நுட்பப் புரட்சியை மகளிர் சக்தி வழிநடத்தும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது"

Posted On: 11 MAR 2024 12:24PM by PIB Chennai

புதுதில்லி, பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று “வலுவான மகளிர் சக்தி – வளர்ச்சி அடைந்த பாரதம்” என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, நமோ ட்ரோன் சகோதரிகள்  நடத்திய விவசாயப் பணியில் ட்ரோன்கள் தொடர்பான செயல் விளக்கத்தைப் பார்வையிட்டார்.  நாடு முழுவதும் 10 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த நமோ ட்ரோன் சகோதரிகள் ட்ரோன் செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ட்ரோன்களைப்  பிரதமர் வழங்கினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள் அமைத்துள்ள வங்கி இணைப்பு முகாம்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு மானிய வட்டியில் சுமார்  ரூ. 8,000 கோடி வங்கிக் கடன்களையும் பிரதமர் வழங்கினார். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2,000 கோடி மூலதன ஆதரவு நிதியையும் பிரதமர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயனாளிகளுடன் பிரதமர்  கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில்  பேசிய பிரதமர், ட்ரோன் சகோதரிகளும், லட்சாதிபதி சகோதரிகளும் வெற்றியின் புதிய அத்தியாயங்களை எழுதி வருவதாகவும், இன்றைய நிகழ்ச்சி வரலாற்றுச்  சிறப்பு மிக்கது என்றும்  கூறினார். இதுபோன்ற வெற்றிகரமான பெண் தொழில்முனைவோருடன் உரையாடுவது  நாட்டின்  எதிர்காலம்  குறித்த நம்பிக்கையை அதிகரிக்கிறது என்று  அவர் கூறினார். மகளிர் சக்தியின் உறுதி மற்றும் விடாமுயற்சியை அவர் பாராட்டினார். 3 கோடி லட்சாதிபதி  சகோதரிகளை உருவாக்கும் பயணத்தைத் தொடங்குவதற்கான  நம்பிக்கையை  இது தமக்கு அளித்துள்ளது  என்று  அவர்  கூறினார்.

வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், மகளிர் சக்தியின் கண்ணியத்தை உறுதி செய்வதன் மூலமும் மட்டுமே எந்த ஒரு சமூகமும் முன்னேற முடியும் என்று பிரதமர் கூறினார். மகளிர் சக்தி மற்றவர்களுக்கான ஆதரவாக மாறுகிறது என்று பிரதமர்  கூறினார்.  பெண்களுக்கு கழிவறைகள், சானிட்டரி நாப்கின்கள், புகை நிறைந்த சமையலறைகளை மாற்றுவது, குழாய் மூலம் குடிநீர் வழங்குவது, ஒவ்வொரு பெண்ணுக்கும் ஜன் தன் வங்கிக் கணக்கு போன்ற மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் போன்றவை குறித்து செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து பேசிய முதல் பிரதமர் தாம்தான் என்று திரு நரேந்திர மோடி  கூறினார்.

மோடியின் திட்டங்கள் அன்றாட வாழ்க்கையில் வேரூன்றிய அனுபவங்களிலிருந்து வெளிவந்தவை என்று பிரதமர் கூறினார். வாழ்க்கையின் யதார்த்தங்களை இவை உணர்த்தியுள்ளது என்று அவர் கூறினார். அதனால்தான் இந்தத் திட்டங்கள் நாட்டின் தாய்மார்களுக்கும் மகள்களுக்கும் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மகளிரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது பிரச்சினைகளுக்குத்  தீர்வு காணக் கொண்டு வரப்படும் திட்டங்கள் குறித்து பிரதமர் பேசினார். பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் நோக்கில், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டம், கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்கு ரூ. 6000 வழங்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்புத் திட்டம், பெண் தொழில் முனைவோருக்கு முத்ரா திட்டம், மகப்பேறு விடுப்பு விரிவாக்கம், பெண்களின் பெயரில் பிரதமர்  வீடுளைப்  பதிவு  செய்வதன் மூலம் அவர்களது உரிமையை மேம்படுத்துதல் போன்றவை நல்ல  மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். வேளாண் துறையில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் தாக்கம் நாட்டின் பெண்களால் வழிநடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். ட்ரோன் சகோதரிகளுடன் கலந்துரையாடியதை நினைவு கூர்ந்த பிரதமர், வருமானம், திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிக்கப்படுவதை அவர் எடுத்துரைத்தார். நாட்டில் தொழில்நுட்பப் புரட்சிக்கு மகளிர் சக்தி தலைமை தாங்கும் என்பதில் தமக்கு முழு நம்பிக்கை உள்ளது  என்று குறிப்பிட்ட பிரதமர், அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முன்னேற்றம் பற்றி எடுத்துரைத்தார். பால் மற்றும் காய்கறிப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வது, மருந்து விநியோகம் போன்ற துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது குறித்து அவர் குறிப்பிட்டார். இவற்றின் மூலம்  ட்ரோன்   சகோதரிகளுக்கு  புதிய  வாய்ப்புகள்  திறக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் சுய உதவிக் குழுக்களின் விரிவாக்கம் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். இந்தக் குழுக்கள் நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளித்தலில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன என்று அவர் கூறினார். சுய உதவிக் குழுக்களில் பெண்களின் முக்கிய பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், சுய உதவிக் குழுக்களில் உள்ள ஒவ்வொரு சகோதரிக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர்களின் கடின உழைப்பு இந்தக் குழுக்களை தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். தற்போது சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது  என்று குறிப்பிட்டார். சுய உதவிக் குழுக்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை எடுத்துரைத்தப்  பிரதமர், கடந்த பத்து ஆண்டுகளில் சுய உதவிக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், இந்தக் குழுக்களில் 98 சதவீதம்  பேருக்கு வங்கிக் கணக்குகளைத் திறக்க அரசு உதவியுள்ளது என்றார்.  சுய உதவிக் குழுக்களுக்கான உதவி 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், அத்தகைய குழுக்களின் கணக்குகளில் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.  நவீன உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டதன் காரணமாக, இந்த சுய உதவிக் குழுக்களின் வருமானம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும்  பிரதமர்  குறிப்பிட்டார்.

சுய உதவிக்   குழுக்களின் சமூக தாக்கத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இந்தக் குழுக்கள் கிராமப்புற உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் கிராமப்புற சமூகங்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அவர் கூறினார். சுகாதாரம் முதல் டிஜிட்டல் இந்தியா வரை நாட்டின் தேசிய இயக்கங்களுக்கு புதிய உத்வேகத்தை மகளிர் அளிப்பதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் கிராமப்புற டிஜிட்டல் கல்வி இயக்கத்தை நடத்துபவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் எனவும் இதன் பயனாளிகளிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தொடர் வெற்றிகள், மகளிர்  சக்தி மீதான தமது  நம்பிக்கையை வலுப்படுத்துவதாக உள்ளன என்று பிரதமர் கூறினார்.

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தை  அமல்படுத்த சுய உதவிக் குழுக்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இதில் எடுக்கும் முன்முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

மத்திய அமைச்சர்கள் திரு அர்ஜுன் முண்டா, டாக்டர் மன்சுக் மாண்டவியா, திரு கிரிராஜ் சிங் ஆகியோர்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நமோ ட்ரோன் சகோதரிகள் மற்றும் லட்சாதிபதி சகோதரிகள் முன்முயற்சிகள் பெண்களிடையே, குறிப்பாக கிராமப்புறங்களில் பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் நிதித் தற்சார்பை ஊக்குவிக்கின்றன.

*************

PKV/PLM/KV

 



(Release ID: 2013430) Visitor Counter : 77