தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் துணை மண்டல அலுவலகத்தை அமைக்க இஎஸ்ஐசி முடிவு

Posted On: 06 MAR 2024 9:00AM by PIB Chennai

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் நிலைக்குழுவின் 231-வது கூட்டம் 05.03.2024 அன்று புதுதில்லியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், காப்பீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவக் கவனிப்பு மற்றும் பணப் பலன்கள் கிடைப்பதை அதிகரிக்கும் நோக்கில் பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன:

 ஆல்வாரில் துணை மண்டல அலுவலகத்தை அமைக்க இஎஸ்ஐசி முடிவு

கூட்டத்தில், ராஜஸ்தானின் ஆல்வாரில் துணை மண்டல அலுவலகத்தை நிறுவ முடிவு எடுக்கப்பட்டது.  ஆல்வார், கைர்தால்-திஜாரா, கோத்புட்டில்லி-பெஹ்ரோர், பரத்பூர் மற்றும் தீக் மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 12 லட்சம் காப்பீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் இஎஸ்ஐ திட்டத்தின் பயனாளிகள் ஆல்வாரில் ஒரு புதிய துணை மண்டல அலுவலகம் நிறுவப்படுவதன் மூலம் பயனடைவார்கள்.

7 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் கட்டுவதற்கான மதிப்பீடுகளுக்கு ஒப்புதல்

ஹரோஹள்ளி, நர்சாபுரா, பொம்மசந்திரா (கர்நாடகா), மெருட், பரேலி (உத்தரப்பிரதேசம்), பீதாம்பூர் (மத்தியப் பிரதேசம்), துபுரி (ஒடிசா)  ஆகிய 7 இடங்களில் புதிய தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள் கட்டுவதற்கு 1128.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மதிப்பீடுகளுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். இந்த மருத்துவமனைகள் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் தற்போதுள்ள மருத்துவ பராமரிப்பு உள்கட்டமைப்புடன் 800 படுக்கைகளை கூடுதலாக உருவாக்கும்.

மருத்துவ மற்றும் பணப் பயன்கள் வழங்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான வளர்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்கு பார்வையை மனதில் வைத்து இந்த மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களை நிறுவுவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.   கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாவட்டங்கள் மற்றும் காப்பீட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை முறையே 666 மற்றும் 3.43 கோடியாக உயர்ந்துள்ளது. இக்கூட்டத்தில் இஎஸ்ஐசி தலைமை இயக்குநர் டாக்டர் ராஜேந்திர குமார், முதலாளிகளின் பிரதிநிதிகள், ஊழியர்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சகம் மற்றும் இஎஸ்ஐசி ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2011780)

PKV/AG/RR


(Release ID: 2011827) Visitor Counter : 106