நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரிச் சுரங்க ஏலம் - வெளிப்படையான ஏல முறையால் பெருமளவிலான தனியார் துறையினர் பங்கேற்றனர்
Posted On:
05 MAR 2024 3:24PM by PIB Chennai
நிலக்கரிச் சுரங்க ஏலத்தில், வெளிப்படைத் தன்மைக் கடைப் பிடிக்கப்பட்டதன் மூலம் பெருமளவிலான தனியார் துறையினர் பங்கேற்றுள்ளனர். ஏல முறை, ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகள் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது.
வணிக நிலக்கரி ஏலத்தில், வரலாற்றில் முதன்முறையாக தனியார், பொதுத் துறைகளின் பங்கேற்பு காணப்பட்டது. தொழில்நுட்ப அல்லது நிதித் தகுதி அளவீடுகள் இல்லாமல், தற்போதுள்ள ஏலதாரர்கள் மற்றும் சுரங்கத் துறையில் முன் அனுபவம் இல்லாத ஏலதாரர்கள் பெருமளவில் பங்கேற்க வழிவகுத்தது. இதன் விளைவாக, நிலக்கரி சுரங்கத்தில் முன் அனுபவம் இல்லாத பல முதல்முறை ஏலதாரர்கள் வெற்றிகரமான ஏலதாரர்களாக உருவாகியுள்ளனர். மேலும், பல பொதுத்துறை நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்று நிலக்கரி சுரங்கங்களைப் பெற்றுள்ளன.
மொத்தம் 91 நிலக்கரிச் சுரங்கங்கள் வணிக ஏலத்தின் கீழ், ஏலம் விடப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.33,000 கோடிக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்படையான, நியாயமான ஏல செயல்முறை தொழில்துறையால் வரவேற்கப்பட்டுள்ளது. இதில் எந்தப் புகாரும் இல்லை.
2015-ம் நிதியாண்டு முதல் 2020-ம் நிதியாண்டு வரை, மொத்தம் 24 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டன. அதே நேரத்தில், 2020–ம் நிதியாண்டு முதல் தற்போது வரை, மொத்தம் 91 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன.
ஏல நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை நிலைநிறுத்துவதன் மூலம், நிலக்கரி அமைச்சகம் அதிக தனியார் துறை பங்களிப்பை ஊக்குவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தி நிலக்கரித் தொழிலுக்குள் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
***
PKV/IR/RS/KRS
(Release ID: 2011660)
Visitor Counter : 75