பாதுகாப்பு அமைச்சகம்

2024-ம் ஆண்டின் முதலாவது கடற்படை கமாண்டர்கள் கருத்தரங்கு நாளை தொடங்குகிறது

Posted On: 04 MAR 2024 10:53AM by PIB Chennai

2024ம் ஆண்டின் கடற்படை கமாண்டர்கள் கருத்தரங்கின் முதலாவது பதிப்பு நாளை தொடங்குகிறது. இந்தக் கருத்தரங்கின் முதல் கட்ட நிகழ்வு கடற்பகுதியில் நடைபெறுகிறது. கடற்படை விமானந்தாங்கி கப்பல்களில் மேற்கொள்ளப்படும் சாகசகங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார்.

ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த கடற்படை கருத்தரங்கில் கடற்பகுதி பாதுகாப்பில் மேற்கொள்ளப்படும் உத்திகள், செயல்முறைகள், நிர்வாக விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடற்படைப் பாதுகாப்பில் பிராந்திய அளவில் நிலவும் தற்போதைய சூழல்கள், சவால்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. கடற்படையின் எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கான முக்கிய முடிவுகளும் இந்த கருத்தரங்கில் மேற்கொள்ளப்பட உள்ளன.

மூன்றுநாள் கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடற்படை கமாண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். கடற்படை, விமானப் படைகளின் தளபதிகள், முப்படைகளின் தலைவர்  ஆகியோரும் கடற்படை கமாண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனர். பொதுவான தேச பாதுகாப்பு சூழல் குறித்து முப்படைகளிடையே ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கமாண்டர்கள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது. தேசத்தின் பாதுகாப்புக்காக படைகளின் தயார் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

கடந்த ஆறுமாதங்களாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதலால் இந்தோ-பசிபிக் பிராந்தியம் புவியல், அரசியல் ரீதியிலான முக்கியமான மாற்றங்களைக் கொண்டிருந்தது. வணிகக் கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களும் நடைபெற்றன. இந்தப் பிராந்தியத்தில் முதன்மையான பாதுகாப்பு பங்கெடுப்பாளர் என்ற கடமையைக் கருத்தில் கொண்டு இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக முதலாவதாக இந்தியக் கடற்படை பதிலடி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இந்தியக் கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் மேற்கொள்வதில் கமாண்டர்கள் கருத்தரங்கு நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.  தெளிவான உத்தி, செயலாக்கத்திறன், புதுமையான தொழில்நுட்பம், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட வேண்டிய விஷயங்களைக் கடற்படையின் கடமைகளை கடற்படை கமாண்டர்கள் கருத்தரங்கு மீண்டும் வலியுறுத்தும்.

***

(Release ID: 2011148)

PKV/BS/KRS



(Release ID: 2011342) Visitor Counter : 52