குடியரசுத் தலைவர் செயலகம்

பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 01 MAR 2024 1:42PM by PIB Chennai

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் பஞ்சா பிகாரில் உள்ள பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (2024 மார்ச் 1) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். 

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஒடிசாவின் வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய வரலாற்றிலும் ஒடிசாவின் தெற்குப் பகுதி மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்றார். இந்த மண், கல்வி, இலக்கியம், கலைகள் மற்றும் கைவினைக் கலைகள் நிறைந்தது. இந்தப் பிராந்தியத்தின் மகன்களான கபி சாம்ராட் உபேந்திர பஞ்சா மற்றும் கபிசூர்யா பலதேவ் ராத் ஆகியோர் ஒடியா மற்றும் இந்திய இலக்கியத்தை தங்கள் எழுத்துக்கள் மூலம் வளப்படுத்தியுள்ளனர். இந்த மண் பல சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள் மற்றும் பொது சேவகர்களின்  பிறப்பிடமாகவும், பணியிடமாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.

1967-ம் ஆண்டு நிறுவப்பட்ட பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகம், ஒடிசாவின் தெற்குப் பகுதியில் உள்ள பழமையான பல்கலைக்கழகம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். பழங்குடியினர் பெரும்பான்மையாக உள்ள இந்தப் பிராந்தியத்தின் கல்வி மற்றும் வளர்ச்சியில் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின் பங்கை அவர் பாராட்டினார்.

பெர்ஹாம்பூர் பல்கலைக்கழகத்தின் முதுகலை துறைகள் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் சுமார் 45,000 மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். மாணவர்களில் 55 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாணவிகள் என்பது மகிழ்ச்சி அளிப்பதாகும் என்று அவர் கூறினார். இது மட்டுமல்லாமல், தங்கப் பதக்கம் வெல்பவர்களில் 60 சதவீதம் பேர் மாணவிகள் என்றும், இன்று முனைவர் பட்டம் பெறும் ஆராய்ச்சியாளர்களில் பாதிப்பேர் மாணவிகள்தான் என்றும், பாலின சமத்துவத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றும் அவர் கூறினார்.

சம வாய்ப்புகள் வழங்கப்பட்டால், மாணவிகளுக்கு ஆண் குழந்தைகளை விட, சிறந்த செயல்திறன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று குடியரசுத் தலைவர் கூறினார். இலக்கியம், பண்பாடு, நடனம், இசை ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அறிவியல், தொழில்நுட்பம் தொடங்கி, காவல்துறை, ராணுவம் என ஒவ்வொரு துறையிலும் நமது பெண்களின் ஆற்றல் வெளிப்படுகிறது. தற்போது, பெண்கள் மேம்பாடு என்ற கட்டத்திலிருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற கட்டத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

பட்டமளிப்பு விழா என்பது வெறும் பட்டம் பெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல என்று கூறிய குடியரசுத் தலைவர், மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் வெற்றியை அங்கீகரிப்பதும் ஒரு கொண்டாட்டமாகும் என்றார். இது புதிய கனவுகள் மற்றும் சாத்தியங்களுக்கான கதவுகளைத் திறக்கிறது. பட்டம் பெறுவது கல்வியின் முடிவு அல்ல என்று அவர் கூறினார்.  மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் அறிவையும், ஞானத்தையும் தங்களுக்காக மட்டுமல்லாமல், மற்றவர்களுக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தேசத்தைக் கட்டியெழுப்புவது குறித்தும் அவர்கள் சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

***

PKV/RS/KV



(Release ID: 2010587) Visitor Counter : 62