பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 25 FEB 2024 7:45PM by PIB Chennai

பாரத் மாதா கீ ஜே!
பாரத் மாதா கீ ஜே!
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத்தின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் பிற பிரமுகர்களே, ராஜ்கோட்டின் எனது சகோதர சகோதரிகளே, வணக்கம்!

 பல நகரங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாக்கள் ஒரே நேரத்தில் நடைபெறும் ஒரு புதிய பாரம்பரியத்தை இந்த நிகழ்வு குறிக்கிறது. சில நாட்கள் முன்பாக நான் ஜம்மு காஷ்மீர் சென்றிருந்தேன். ஜம்முவிலிருந்து ஒரே நேரத்தில் ஐஐடி பிலாய், ஐஐடி திருப்பதி, கர்னூல் இந்திய தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம், ஐஐஎம் புத்தகயா, ஐஐஎம் ஜம்மு, விசாகப்பட்டினம் ஐஐஎம்  ஐஐஎஸ் கான்பூர் ஆகியவற்றின் பல்வேறு கல்வி வளாகங்களை ஒரே நேரத்தில் தொடங்கி வைத்தேன். இப்போது ராஜ்கோட்டில் இருந்து எய்ம்ஸ் ராஜ்கோட், எய்ம்ஸ் ரேபரேலி, எய்ம்ஸ் மங்களகிரி, எய்ம்ஸ் பதிண்டா, எய்ம்ஸ் கல்யாணி ஆகியவற்றை ஒரே நேரத்தில் தொடங்கி வைக்கிறோம்.
நண்பர்களே,
இன்று, நீங்களும், நாடு முழுவதுமே ரூ.48,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைக் கண்டிருக்கிறீர்கள். புதிய முந்த்ரா-பானிபட் குழாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது குஜராத்திலிருந்து ஹரியானாவின் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய்கள் மூலம் கச்சா எண்ணெயை நேரடியாக கொண்டு செல்ல உதவுகிறது. இன்று, ராஜ்கோட் உட்பட சவுராஷ்டிரா பிராந்தியம் முழுவதற்கும் சாலைகள், பாலங்கள், ரயில் பாதைகள் இரட்டிப்பு, மின்சாரம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட எண்ணற்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராஜ்கோட் தற்போது எய்ம்ஸை வரவேற்கிறது, இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. ராஜ்கோட், சவுராஷ்டிரா மற்றும் ஒட்டுமொத்த குஜராத்துக்கும், இன்று எய்ம்ஸ் வசதிகள் அர்ப்பணிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்துகள்.

நண்பர்களே,
மோடியின் உத்தரவாதத்தின் மீதான நாட்டின் நம்பிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து உருவாகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைகளின் தொடக்க விழா இதற்கு ஒரு சான்றாக விளங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ராஜ்கோட்டில் அடிக்கல் நாட்டி அதன் முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நான் வாக்குறுதி அளித்தேன், இன்று, அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றியுள்ளேன். அதேபோல், தற்போது தொடங்கப்பட்டுள்ள பதிண்டா எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் அடிக்கல் நாட்டி, பஞ்சாபில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வசதிகளுக்கு நான் உத்தரவாதம் அளித்தேன். உத்தரவாதத்தை நிறைவேற்றினேன். 
நண்பர்களே,
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் தங்களது சேமிப்பு குறையாமல் மேம்பட்ட சுகாதார சேவையைப் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் அரசின் தொடர்ச்சியான முயற்சியாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால், ஏழைகளுக்கு ரூ.1 லட்சம் கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதலாக, மக்கள் மருந்தக மையங்கள் மூலம் 80% தள்ளுபடியில் மருந்துகள் கிடைப்பது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை ரூ .30 ஆயிரம் கோடி செலவழிப்பதிலிருந்து மீட்டுள்ளது. 
நண்பர்களே,
நாடு முழுவதும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் நமது உறுதிப்பாட்டிற்கு வலு சேர்ப்பதாக அமையும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கவும் நாம் தொடர்ந்து இணைந்து முன்னேறுவோம். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாம் அனைவரும் ஒன்றாகச் சொல்வோம் – 
பாரத் மாதா கி ஜே!
 பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!

மிகவும் நன்றி!

************

ANU/PKV/IR/AG/KV


(Release ID: 2009339) Visitor Counter : 61