பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா-ஜப்பான் இராணுவ கூட்டுப் பயிற்சி 'தர்மா கார்டியன்' ராஜஸ்தானில் தொடங்கியது
Posted On:
25 FEB 2024 12:19PM by PIB Chennai
இந்திய ராணுவம் மற்றும் ஜப்பானின் தரைப்படை இடையேயான 5வது 'தர்மா கார்டியன்' கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் இன்று தொடங்கியது. இந்தப் பயிற்சியை 2024 மார்ச் 9வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
'தர்மா கார்டியன்' பயிற்சி ஆண்டுதோறும் இந்தியா மற்றும் ஜப்பானில் மாறி மாறி நடத்தப்படுகிறது. இரு தரப்பிலும் தலா 40 வீரர்கள் உள்ளனர். ஜப்பானிய படைப்பிரிவை 34வது காலாட்படைப்பிரிவின் துருப்புகளும், இந்திய ராணுவ படைப்பிரிவை ராஜபுதன ரைபில்ஸைச் சேர்ந்த ஒரு பட்டாலியனும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
தற்காலிக இயக்க தளத்தை நிறுவுதல், புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் உளவு (ஐ.எஸ்.ஆர்) கட்டத்தை உருவாக்குதல், நடமாடும் வாகன சோதனைச் சாவடி அமைத்தல், மோதல் ஏற்படும் கிராமத்தில் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை செயல்படுத்துதல், ஆகியவை பயிற்சிகளில் அடங்கும். 'தற்சார்பு இந்தியா' முன்முயற்சி மற்றும் வளர்ந்து வரும் பாதுகாப்பு தொழில்துறை திறனை வெளிப்படுத்தும் ஆயுதம் மற்றும் உபகரணங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்.
"தர்மா கார்டியன் பயிற்சி" நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜப்பான் தரைப்படையின் கிழக்கு கமாண்டிங் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் டோகாஷி யுய்ச்சி இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இவர் மார்ச் 3 அன்று பயிற்சிகளைக் காண்பார்.
இந்தப் பயிற்சி இருதரப்பு துருப்புகளுக்கு இடையே பரஸ்பர இயக்கம், நல்லிணக்கம் மற்றும் தோழமையை மேம்படுத்த வழிவகுக்கும். இது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவை மேம்படுத்துவதோடு, இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வளர்க்கும்.
*******
ANU/AD/SMB/DL
(Release ID: 2008884)
Visitor Counter : 347