பாதுகாப்பு அமைச்சகம்

2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்

Posted On: 24 FEB 2024 10:02AM by PIB Chennai

2023 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 4 வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற ஆயுதப்படை வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.25 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.15 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் முப்படைகளின் பல விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். நாடு திரும்பியுள்ள அவர்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டியதோடு, அவர்களின் சிறப்பான செயல்திறனுக்காக அவர்களை வாழ்த்தினார்.

7 பாரா தடகள வீரர்கள் உட்பட பதக்கம் வென்ற 45 பேருக்கு ரொக்கப் பரிசு வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்தார். இந்த 45 விளையாட்டு வீரர்களும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 09 தங்கம், 18 வெள்ளி மற்றும் 17 வெண்கலப் பதக்கங்களையும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 01 தங்கம், 04 வெள்ளி மற்றும் 02 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

முதன்முறையாக ஆயுதப்படை வீரர்களுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இந்த நிதி ஊக்கத்தொகை, இந்த விளையாட்டு வீரர்கள் தற்போது தயாராகி வரும் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு 2024 இன் தகுதிப் போட்டிகளில் இன்னும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த மேலும் ஊக்குவிக்கும்.

*******

 

AD/BS/DL



(Release ID: 2008629) Visitor Counter : 69