சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல் மூன்று நாள் தேசிய பொது சுகாதார இந்தியா மாநாட்டைத் தொடங்கி வைத்தார்
Posted On:
23 FEB 2024 4:26PM by PIB Chennai
நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் முன்னிலையில் முதலாவது தேசிய பொது சுகாதார இந்தியா மாநாட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். இந்த மூன்று நாள் மாநாடு 2024 பிப்ரவரி 23 முதல் 25 வரை சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், பொது சுகாதாரத்தை முன்னெடுப்பதிலும், வளர்ச்சியடைந்த பாரதம் குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த கொள்கைகளை வகுப்பதிலும் மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நெகிழக்கூடிய சுகாதாரக் கொள்கைகள் மற்றும் தலையீடுகளின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் இந்த முக்கிய நிகழ்வை ஏற்பாடு செய்வதில் என்.சி.டி.சி.யின் தலைமை மற்றும் அர்ப்பணிப்பை அமைச்சர் பாராட்டினார்.
மத்திய இணையமைச்சர் பேராசிரியர் பாகேல் மேலும் கூறுகையில், "இந்தியாவின் வளர்ச்சிக்கான நமது பார்வையின் இதயத்தில் சுகாதாரம் என்பது நோய் இல்லாமை மட்டுமல்ல, ஒரு அடிப்படை மனித உரிமை மற்றும் நிலையான வளர்ச்சியின் அடித்தளம் என்பதை அங்கீகரிப்பதே ஆகும். ஆரோக்கியமான மக்கள் தொகை அதிக உற்பத்தித்திறன் மட்டுமின்றி, பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனும் கொண்டது. எனவே, நமது வளர்ச்சி நிகழ்ச்சி நிரலின் மையக் கோட்பாடாக ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது கட்டாயமாகும் ".
"அதிக மக்கள்தொகை, விரைவான நகரமயமாக்கல் மற்றும் அதிகரித்து வரும் சுகாதாரப் பராமரிப்பு தேவைகளுடன், சவால்கள் மகத்தானவை. எவ்வாறாயினும், இந்தச் சவால்களுக்கு மத்தியில் புதுமைப்படுத்துவதற்கும், ஒத்துழைப்பதற்கும், அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி வழி வகுப்பதற்கும் தனித்துவமான வாய்ப்புகள் உள்ளன ".
நாட்டில் பொது சுகாதார கவலைகள் மற்றும் தொடர்புடைய சுகாதார நடைமுறைகள் குறித்த அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இந்த மாநாடு ஒரு பொதுவான தளத்தை வழங்கும் என்றும் அவர் கூறினார். தொற்றுநோய்களின் போது கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த அயராது உழைத்ததற்காக என்.சி.டி.சியைப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் இயக்க இயக்குநர் திருமதி எல்.எஸ்.சாங்சன்; மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநில பொது சுகாதார திட்டங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள், முதுகலை மருத்துவ மாணவர்கள் மற்றும் முக்கிய பங்கெடுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
***
ANU/PKV/BS/RS/KRS
(Release ID: 2008495)
Visitor Counter : 174