கலாசாரத்துறை அமைச்சகம்

ஆவணக் காப்பகத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் ஓமனும் முடிவு செய்துள்ளன

Posted On: 23 FEB 2024 2:50PM by PIB Chennai

ஆவணக் காப்பகங்களின் தலைமை இயக்குநர்  திரு அருண் சிங்கால், துணை இயக்குநர் டாக்டர் சஞ்சய் கார்க் மற்றும் ஆவணக்காப்பு செயல்பாட்டாளர் திருமதி சதாஃப் பாத்திமா ஆகியோர் அடங்கிய தேசிய ஆவணக் காப்பகத்தின் பிரதிநிதிகள் குழு, 2024 பிப்ரவரி 21 மற்றும் 22 தேதிகளில் ஓமனின் தேசியப் பதிவுகள் மற்றும் ஆவணக் காப்பக ஆணையத்திற்கு (NRAA-என்ஆர்ஓஏஏ) பயணம் செய்தனர். ஆவணங்கள், சுவடிகள் காப்பகத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.

மின்னணு பதிவுகள் மற்றும் ஆவண முகாமைத்துவ முறைமைகள் (ஈ.டி.ஆர்.எம்.எஸ்) பிரிவு, மைக்ரோபிலிம் பிரிவு, தனியார் பதிவு பிரிவு, பதிவுத் துறைக்கான அணுகல், மின்னணு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட ஓமன் ஆவணக் காப்பகத்தின் பல்வேறு பிரிவுகளின் பொறுப்பாளர்கள், இந்திய தூதுக்குழுவினருக்கு பிரத்தியேக விளக்கங்களை வழங்கினர். 

ஓமனின் என்ஆர்ஏஏ-வின் தலைவர் திரு ஹமாத் முகமது அல்-தவ்யானியுடன் ஆவணக் காப்புத் துறையில் இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் குறித்து திரு அருண் சிங்கால் பேசினார். இந்தியாவில் ஓமன் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் இருப்பது குறித்து அந்நாட்டு ஆவணக் காப்பக்தின் தலைவரிடம் அவர் தெரிவித்தார். நல்லெண்ணத்தின் அடையாளமாக, இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் (என்ஏஐ) உள்ள ஓமன் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட 70 ஆவணங்களின் பட்டியலை திரு சிங்கால் ஒப்படைத்தார். இந்த ஆவணங்கள் 1793-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கியது. கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இத்துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தின் வரைவு இறுதி செய்யப்பட்டது. இது இப்போது இரு தரப்பினரின் மேலதிகாரிகளின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு எதிர்காலத்தில் முறையாக கையெழுத்திடப்படும்.

முன்மொழியப்பட்ட வரைவுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சில நடவடிக்கைகள் பின்வருமாறு:

•        இரண்டு ஆவணக் காப்பகங்களிலிருந்தும் தொகுக்கப்பட்ட ஆவணக் காப்பகப் பொருட்களின் அடிப்படையில் ஒரு கூட்டுக் கண்காட்சியை ஏற்பாடு செய்வதுடன், இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை எடுத்துரைக்கும் ஒரு மாநாட்டையும் ஏற்பாடு செய்தல்;

•        இரண்டு சேகரிப்புகளையும் வளப்படுத்த பரஸ்பர ஆர்வமுள்ள ஆவணங்களின் டிஜிட்டல் நகல்களை பரிமாறிக்கொள்வது.

•        இரு நிறுவனங்களின் சிறந்த நடைமுறைகள் குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பாதுகாத்தல் துறைகளில் உள்ள நிபுணர்களை உள்ளடக்கிய பரிமாற்ற திட்டத்திற்கான கட்டமைப்பை எளிதாக்குதல்;

•        இரண்டு ஆவணக் காப்பகங்களிலிருந்தும் தொகுக்கப்பட்ட ஆவணக் காப்பகப் பொருட்களின் அடிப்படையில் ஒரு கூட்டு வெளியீட்டைக் கொண்டு வருதல்.

ஓமனின் பல்வேறு பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் இந்திய வம்சாவளியினருடனும் இந்தியப் பிரதிநிதிகள் கலந்துரையாடினர். அவர்கள் வசம் உள்ள முக்கிய ஆவணங்களைக் காப்பதில் அக்கறை செலுத்துமாறு வெளிநாடுவாழ் இந்தியர்களை தேசிய ஆவணக் காப்பகத் தலைமை இயக்குநர் ஊக்குவித்தார்.

**************

ANU/PKV/PLM/KV

 

 



(Release ID: 2008401) Visitor Counter : 59


Read this release in: English , Urdu , Hindi , Telugu